Jasprit Bumrah
ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் படுதோல்வியால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு அவரிடம் கேப்டன் பதவி பறிக்கப்பட உள்ள நிலையில், பும்ரா அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால் பும்ராவின் தொடர்ச்சியான உடற்தகுதி பிரச்சினைகள் அவரது கேப்டன் பதவியில் நியமிக்கப்படுவாரா? என சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் முதுகு பகுதியில் காயம் அடைந்த பும்ரா, சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஆனால் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் நேரத்தில் பும்ரா குணமடைவார் என்று இந்திய தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Jasprit Bumrah Bowling
பிசிசிஐ தயக்கம்
ஆனால் தொடர் காயம் காரணமாக பும்ராவை முழு நேர கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா இந்தியாவை வழிநடத்தினால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வாளர்கள், எதிர்பாராத சூழ்நிலைகளில் பொறுப்பேற்கக்கூடிய திறமையான துணை கேப்டன்களை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தனித்து நிற்கிறார்கள், பண்ட் தனது அனுபவம் மற்றும் தலைமைத்துவ திறன் காரணமாக முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்து கொண்ட பிசிசிஐ கூட்டத்தில் பும்ராவின் உடற்தகுதி குறித்த தலைப்பு முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாக கூறப்படுகிறது.
India vs England Test Series
பணிச்சுமை
இங்கிலாந்து தொடரில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டு காயம் காரணமாக பாதியில் வெளியேறினால் அது இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படுத்தி விடும் என்பதால், பும்ராவை கேப்டனாக்க நியமிக்க பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
204 போட்டிகளில் 443 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, சமீபத்தில் பெர்த் மற்றும் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாக உருவெடுத்தார்.
இறுதி டெஸ்டில் ஏற்பட்ட முதுகு வலியால் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியாமல் போனது. டெஸ்டில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதன் கடினமான பணிச்சுமை அவரை காயத்தில் தள்ளி விட்டது.
BCCI
பும்ரா டெஸ்ட்களில் அதிகம் பந்துவீசுவதாலும், 30 வயதை தாண்டி விட்டதாலும் அவர் காயம்படுவதற்கான ஆபத்துகள் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகள் ஜூன் 2025 முதல் ஜூன் 2027 வரை நீடிக்கும் நிலையில், பும்ரா மேலும் காயமடைய மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் டெஸ்ட்களில் பும்ராவின் கைகளில் கேப்டன் பொறுப்பை கொடுக்க தயக்க காட்டி வருவதாகவும், மாற்று கேப்டன்கள், துணை கேப்டன்களை தேடி வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.