CSK vs RR: கடைசி வரை திக் திக் திக்! சூப்பர் பவுலிங்கால் ராஜஸ்தான் முதல் வெற்றி! சிஎஸ்கே 2வது தோல்வி!
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் அணியின் முதல் வெற்றியாகும்.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் அணியின் முதல் வெற்றியாகும்.
IPL; Rajasthan Royals beat CSK: ஐபிஎல் கிரிக்கெட்டில் கவுகாத்தி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் அரைசதம் அடித்த நிதிஷ் ராணா 36 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான டிரேட் மார்க் ஷாட்களை விளையாட மறுமுனையில் இருந்த ராகுல் திரிபாதி ரன்கள் அடிக்கவே திணறினார். தொடர்ந்து தடுமாறிய ராகுல் திரிபாதி 19 பந்தில் 23 ரன் எடுத்து ஹசரங்கா பந்தில் அவுட் ஆனார்.
CSK vs RR: ராஜஸ்தானை 200 ரன்னுக்குள் முடக்கிய சிஎஸ்கே! சவாலான இலக்கை எட்டிப் பிடிக்குமா?
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிக்சர் மன்னன் ஷிவம் துபே 2 சிக்சர் அடித்த திருப்தியுடன் நடையை கட்டினார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 18 ரன் எடுத்து ஹசரங்கா பந்தில் ரியான் பராக்கின் சூப்பர் கேட்ச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின்பு களம்புகுந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 9 ரன்னில் ஹசரங்கா பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் சூப்பராக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ருத்ராஜை (44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்சர்) ஹசரங்கா வெளியேற்றினார். இதனால் சிஎஸ்கே சிக்கலில் சிக்கித்தவித்தது. அடுத்து ரசிகர்களின் வழக்கமான வரவேற்பில் தோனி களம் புகுந்தார். கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. தோனியும், ஜடேஜாவும் களத்தில் இருந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
17வது ஓவரை சந்தீப் சர்மா 9 ரன்கள் கொடுத்தார். 18வது ஓவரில் தீக்சனா 7 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 1 பவுண்டரி, 1 சிக்சரும், ஜடேஜா 1 சிக்சரும் விளாசியதால் 19 ரன்கள் வந்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட தோனி (11 பந்தில் 16 ரன் ) சந்திப் சர்மாவின் சூப்பர் பவுலிங்கில் ஹெட்மயரிடம் கேட்ச் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய ஜேமி ஓவர்டன் 1 சிக்சர் அடித்தாலும் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.
சந்தீப் சர்மா கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் வீரர் வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 3வது போட்டியை ஆடும் சிஎஸ்கேவுக்கு இது 2வது தொடர் தோல்வியாகும்.
SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!