Asian Youth Games 2025: மகளிர் அணியை போல் இந்திய ஆண்கள் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை!

Published : Oct 24, 2025, 04:47 PM IST

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணியும், இந்திய பெண்கள் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன. இரண்டு அணியிலும் தமிழக வீரர், வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

PREV
14
Asian Youth Games 2025

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025) பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 119 வீராங்கனைகள் மற்றும் 103 வீரர்கள் என மொத்தம் 222 விளையாட்டு வீரர்கள் 21 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

24
ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் வென்றன

இறுதிப்போட்டியில் ஈரானை சந்தித்த இந்திய அணி 35-32 என்ற கணக்கில் எதிரணியை தோற்கடித்து தங்கத்தை வென்று அசத்தியுள்ளது. ஏற்கெனவே இந்திய மகளிர் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை படைத்து இருந்தது. அதாவது இந்திய மகளிர் அணி அணியும் 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை பந்தாடி தங்கத்தை அறுவடை செய்திருந்தது. இதன் மூலம் கபடியின் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று வீரர், வீராங்கனைகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

34
தமிழக வீரர், வீராங்கனை அசத்தல் ஆட்டம்

இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதேபோல் ஆண்கள் கபடி அணியில் தமிழகத்தை சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழகத்தை சேர்ந்த இருவரது அணியும் தங்கம் வென்றதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

44
உதயநிதி ஸ்டாலின் பெருமை

இது தொடர்பாக உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.

தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்'' என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories