அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

First Published Sep 26, 2022, 5:21 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவுடனான வின்னிங் பார்ட்னர்ஷிப் மற்றும் டக் அவுட்டிலிருந்து (dug out) கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமிருந்து வந்த மெசேஜ் குறித்து பேசியுள்ளார் விராட் கோலி.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு, சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் தான் மிக முக்கியம்.
 

30 ரன்களுக்கே இந்திய அணி ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய டாப் ஆர்டர்களின் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 104 ரன்களை குவித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து, இனி வேறு அணி முறியடிக்க முடியாத சாதனையை படைத்த இந்தியா
 

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆஸ்திரேலிய அணியை அலறவிட்ட சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் அரைசதம் அடித்தார். 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட ஆரம்பித்ததும், செட்டில் ஆகியே இருந்தாலும் கூட சீனியர் வீரரான விராட் கோலி சிங்கிள் எடுத்து சூர்யகுமாருக்கு ஸ்டிரைக் கொடுத்தார்.
 

சூர்யகுமார் அடிக்கிறாரே, நாமும் அடிக்க வேண்டும் என்ற ஈகோவெல்லாம் இல்லாமல், அவர் அடிக்கிறார்; ஒரு சீனியர் வீரராக மறுமுனையில் நின்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்ற முதிர்ச்சியுடன் ஆடினார் கோலி. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். சூர்யகுமார் ஆட்டமிழந்தபின்னர், கோலி பெரிய ஷாட் அடிக்க தொடங்கினார். கோலியின் இந்த பக்குவப்பட்ட  அணுகுமுறை பாராட்டை பெற்றது. கோலி இதை பல முறை செய்திருக்கிறார் என்பதால் இதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யாருக்கு ஆடும்லெவனில் இடம்? விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்

இந்நிலையில், போட்டிக்கு பின் சூர்யகுமாருடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய விராட் கோலி, சூர்யா (சூர்யகுமார்) அடித்து ஆட தொடங்கியதும் டக் அவுட்டில்(dug out) ரோஹித் மற்றும் ராகுல் bhai(டிராவிட்) இருவருமே என்னிடம், சூர்யகுமார் நன்றாக அடிக்கிறார். எனவே நீங்கள்(கோலி) சிங்கிள் ரொடேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை ஆடுங்கள் என்று கூறினர். அதனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினேன். எனது அனுபவத்தை பயன்படுத்தி ஆடினேன். ஒருமுனையில் நான் நிலைத்து நிற்க சூர்யகுமார் அடித்து ஆடினார். சூர்யகுமார் ஆட்டமிழந்தபின் தான், கம்மின்ஸின் பந்தில் சிக்ஸர் அடித்து எனது ஃப்ளோவிற்கு மீண்டும் வந்தேன் என்றார் கோலி.

click me!