IPL 2022: ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த உம்ரான் மாலிக்..!

First Published May 23, 2022, 2:44 PM IST

ஐபிஎல்லில் முதல் முறையாக உம்ரான் மாலிக், அனைத்து (14) லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை வீசியதற்கான அவார்டை வென்று சாதனை படைத்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், முகேஷ் சௌத்ரி, மோசின் கான், யஷ் தயால், சிமர்ஜீத் சிங், குல்தீப் சென் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அதிவேகமாக பந்துவீசி மிரட்டினர்.
 

இவர்களில், தனது துல்லியமான வேகத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சன்ரைசர்ஸில் ஆடிய உம்ரான் மாலிக் தான். இந்த சீசனில் 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் அதிவேக பந்தையும் வீசினார். உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான், இந்த சீசனின் 2வது அதிவேக பந்து.

நல்ல வேகமாக மட்டுமல்லாது, துல்லியமான லைன்&லெந்த்திலும் வீசியதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பவுலிங்கை எதிர்கொள்ள திணறினர். துல்லியமான லைன் & லெந்த்தில் நல்ல வேகத்தில் வீசி அசத்தினார் உம்ரான் மாலிக்.  அதன்விளைவாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் உம்ரான் மாலிக் இடம்பிடித்துள்ளார். ஆடும் லெவனில் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
 

இந்த ஐபிஎல் சீசனின் அதிவேக பந்தை வீசியது மட்டுமல்லாது, சன்ரைசர்ஸ் அணி ஆடிய அனைத்து போட்டிகளின் அதிவேக பந்தையும் அவர் தான் வீசியிருக்கிறார். ஐபிஎல்லில் ஒவ்வொரு போட்டியிலும், அதிவேக பந்தை வீசும் பவுலருக்கு ஒரு விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், 15வது சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 14 லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை வீசிய விருதை வென்ற பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் உம்ரான் மாலிக்.
 

click me!