ஐபிஎல்லில் அசத்தி இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் ஃபாஸ்ட் பவுலர்? இங்கிலாந்து டூருக்கான அணியில் வாய்ப்பு?

First Published May 22, 2022, 5:33 PM IST

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், முகேஷ் சௌத்ரி, மோசின் கான், யஷ் தயால், சிமர்ஜீத் சிங், குல்தீப் சென் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அதிவேகமாக பந்துவீசி மிரட்டினர்.
 

இவர்களில், தனது துல்லியமான வேகத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சன்ரைசர்ஸில் ஆடிய உம்ரான் மாலிக் தான். இந்த சீசனில் 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் அதிவேக பந்தையும் வீசினார். உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான், இந்த சீசனின் 2வது அதிவேக பந்து.

நல்ல வேகமாக மட்டுமல்லாது, துல்லியமான லைன்&லெந்த்திலும் வீசியதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பவுலிங்கை எதிர்கொள்ள திணறினர். துல்லியமான லைன் & லெந்த்தில் நல்ல வேகத்தில் வீசி அசத்தினார் உம்ரான் மாலிக். அதன்விளைவாக அவரை இந்திய அணியில் உடனடியாக எடுக்க வேண்டும்; அதுவும் டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. சுனில் கவாஸ்கரும் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.
 

இந்திய அணி ஜூன் 24 முதல் ஜூலை 17ம் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்கை எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், உம்ரான் மாலிக்கின் வேகம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரது வேகத்தை விட அவரது துல்லியமான பந்துவீச்சுதான் என்னை மிகவும் கவர்ந்தது. லெக் திசையில் சில வைடுகளை வீசுகிறார். அதைமட்டும் கட்டுப்படுத்தினால் மிக அபாயகரமான பவுலராக திகழ்வார். ஸ்டம்ப்புக்கு நேராக வீசினால் உம்ரான் மாலிக்கின் பவுலிங்கை பேட்டிங் ஆடுவதே கடினம். அவர் இந்தியாவிற்காக கண்டிப்பாக ஆடுவார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளில் அவர் எடுக்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!