
Top 5 Fastest Centuries for India in T20 Cricket: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 கிரிக்கெட் போட்டிகளைத் தான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவை சுவாரஸ்யமும், பரபரப்பும் தான். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் 5 நாட்கள் விளையாட வேண்டும். அவரள் நின்று கொண்டே இருப்பார்கள். ஒருநாள் போட்டி என்றால் முதல் 10 ஓவர் மற்றும் கடைசி 10 ஓவர் தான் த்ரில்லிங்காக இருக்கும்.
ஆனால், டி20 கிரிக்கெட் என்றால் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பஞ்சமே இருக்காது. மைதானத்தில் 1000, 5000, 10,000 வாலா பட்டாசு வெடிச்சா எப்படி இருக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் ரசிப்பார்கள். இதில் வீரர்களின் தனி திறமையும் வெளிப்படும், அணிகளின் ஸ்கோரும் ஜெட் வேகத்துல உயரும். சாதனைகள் படைக்கப்படும், பல சாதனைகள் உடைக்கப்படும். இதன் காரணமாகத்தான் ஐபிஎல் கிரிக்கெட் இன்னிக்கும் டிரெண்டிங்கில் இருக்கிறது. அப்படி டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வேகமாக சதம் விளாசி டாப் 5 இந்திய வீரர்களைப் பற்றித் தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
அபிஷேக் சர்மா:
ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் அபிஷேக் சர்மா. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தார். அப்படித்தான் இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே யூஸ் பண்ணிக்கிட்ட அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசி சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே சென்றிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், 2ஆவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் எடுத்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 234/2 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கேஎல் ராகுல்:
கடந்த 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த இந்திய அணி 4 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல் 46 பந்துகளில் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட மொத்தமாக 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் 244/4 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்தது.
சூர்யகுமார் யாதவ்:
தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். இவரது தலைமையிலான அணி விளையாடிய எல்லா டி20 தொடர்களை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடர் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடர்களை வென்றுள்ளார். பல சாதனைகளையும் டீம் இந்தியா படைத்துள்ளது. இவரும் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்ஸர் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 228/5 ரன்கள் குவித்தது. கடைசியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன்:
வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இவரது பேட்டிங்கை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. இந்தப் போட்டி தான் அவரது கடைசி வாய்ப்பு என்று கூட விமர்சனம் எழுந்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இந்த போட்டியில் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி 40 பந்துகளில் சதம் விளாசினார். 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சாம்சன் அடுத்த 18 பந்துகளில் 49 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரு ஓவரில் வரிசையாக 4 பவுண்டரி விளாசினார். இன்னொரு ஓவரில் வரிசையாக 5 சிக்ஸர்கள் விளாசினார். டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அதிவேகமாக சதம் விளாசிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார்.
கடைசியில் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 297/6 ரன்கள் குவித்தது. வங்கதேசம் 164/7 ரன்கள் மட்டுமே எடுக்கவே 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
ரோகித் சர்மா:
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா மட்டுமே இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் விளாசியிருக்கிறார். மேலும் 264 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 8 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். டி20 கிரிக்கெட்டிலும் அதிவேகமாக சதம் விளாசி இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதுவரையில் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. 43 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர் உள்பட 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா 260/5 ரன்கள் குவித்தது. இலங்கை 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2ஆவது முறையாக டிராபி வென்றது. இந்த தொடருக்கு பிறகு ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் 159 டி20 போட்டிகளில் இடம் பெற்ற ரோகித் சர்மா 151 இன்னிங்ஸ் விளையாடி 4231 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 32 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 121* ரன்கள் எடுத்துள்ளார்.