
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்குத் தகுதி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக விளையாட முடியாது என்பதால், இந்திய அணி மகிழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், எந்தப் பயனும் இல்லை. இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அவருக்கு யாரும் உதவவில்லை. இதனால், 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால், 4 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் குரூப் A-யின் ஆட்டத்தை இந்திய அணி முடித்தது. அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் பின்தங்கியது இந்தியா. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.
இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3 போட்டிகளில் 2 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஏற்கனவே இலங்கை விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து அரையிறுதி ரேஸிலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பாகிஸ்தான் நியூசிலாந்தைத் தோற்கடித்தால், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆனால், நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியாவின் அரையிறுதி கனவு பறிபோகும்.
அணியின் தோல்வியால் இந்தியா வீழ்ந்தது
ஷார்ஜாவில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளுக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக பொறுப்பேற்ற தஹிலா மெக்ராத் 32 ரன்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 32 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரகர் மற்றும் ராதா யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 152 ரன்களைத் துரத்திய இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அதைச் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அரையிறுதிக்கு சென்றுவிட்டது. விளையாடிய 4 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 34 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா தான் 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதுல இந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவியது. 2020 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா.
இந்தியாவின் தோல்வி
47 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் இருந்தார். தீப்தி 29 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா 20 ரன்கள் எடுத்தார். ஜெமீமா ரோட்ரிக்ஸ் 16 ரன்கள் எடுத்தார்.