
Mahela Jayawardene Back to Mumbai Indians as Head Coach: ஐபிஎல் 2025 தொடருக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. எப்போதுமே பரபரப்பாகவே வைத்திருக்கும் விளையாட்டுகளில் ஐபிஎல் ஒன்று. ஏலம் முதல் டிராபியை கைப்பற்றுவது வரையில் ஒவ்வொரு அணியும் ரசிகர்களை பரபரப்பாகவே கொண்டு செல்லும். எந்த அணி பிளே ஆஃப் செல்லும், எந்த அணி டிராபியை கைப்பற்றும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள்.
அப்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அணிகளில் ரொம்பவே முக்கியமான சென்னை சூப்பர் கிங்ஸ். இன்னொன்று மும்பை இந்தியன்ஸ். இந்த 2 அணிகளும் தான் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. அப்படி 5 முறை டிராபியை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இப்போது கேப்டன்களாக இல்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி மீதும், ஹர்திக் பாண்டியா மீதும் அதிக்கப்படியான விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம் மும்பையின் பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது.
மும்பைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடியாக விளையாடி 277/3 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் வீரர்கள் அடித்த விதத்தில் மிரண்டு போன ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாவை பார்த்து கேப்டன் பொறுப்பை கொடுத்து விட்டு பவுண்டரி லைனுக்கு சென்று பீல்டிங் செய்தார்.
எனினும், இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான பேச்சுகள் அடிபடுகிறது. மேலும், ரோகித் சர்மா 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாக எந்த அணிக்கு செல்வார் என்று அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவிக்குமா? தக்க வைத்துக் கொள்ளுமா என்பது இன்னும் 17 நாட்களில் தெரிந்துவிடும். வரும் 31 ஆம் தேதி தான் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது அணிகளை பலப்படுத்திக் கொள்ள அடிப்படையிலிருந்து சில மாற்றங்களை செய்து வருகின்றன.
அதாவது பேட்டிங் பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என்று மாற்றங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது அதற்காக முதல் காய் நகர்த்தியுள்ளது. கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் பயிற்சியாளான மார்க் பவுச்சர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் வீரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மஹீலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இது குறித்து மும்பை இந்தியன்ஸ், ஆகாஷ் அம்பானி கூறியிருப்பதாவது: மஹேலா மீண்டும் மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய உலகளாவிய அணிகளுக்காக அவரை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு எழுந்தது.
விளையாட்டின் மீதான ஆர்வமும், அவரது தலைமைப்பண்பும், அறிவும் எப்போதும் மும்பை அணிக்கு பயனளிக்கிறது. கடந்த 2 சீசன்களில் மார்க் பௌச்சர் இருந்தார். அவருக்கு இந்த சூழலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே கூறியிருப்பதாவது, “மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்குள் எனது பயணம் எப்போதும் வளர்ச்சியில் உள்ளது. 2017 ஆம் ஆண்டில், சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கு திறமையான தனிநபர்களின் குழுவை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்திற்கும், வரலாற்றில் மும்பை அணியை சேர்ப்பதற்கான வாய்ப்பையு எதிர்பார்க்கிறோம். சவாலை நான் எதிர்நோக்குகிறேன் என்று கூறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றியது.
அதாவது மஹேலா ஜெயவர்தனே பயிற்சியாளராக இருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியானது 3 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மஹேல ஜெயவர்தனே MI இன் உலகளாவிய அணிகளின் விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இதில் ஒரு முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.
MI (WPL), MI NY (MLC) மற்றும் MIE (ILT20) ஆகிய அணிகளில் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ள நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக லசித் மலிங்கா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹேலா ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற நிலையில் ரோகித் சர்மா தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணிக்க்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஆதலால், கடந்த சீசனைப் போன்று ஐபிஎல் 2025 தொடரிலும் ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.