
Top 5 Teams with Most 200 Plus Runs in T20 Cricket: டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு சர்வதேச அணியும் படைக்காத சாதனையை டீம் இந்தியா சர்வ சாதாரணமாக படைத்துள்ளது. அப்படி என்ன சாதனை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட்டைத் தான்.
ஏனென்றால், அதிரடியும் இருக்கும், சிக்ஸரும், பவுண்டரியும் பறக்கும். பார்க்க, ரசிக்க கொண்டாட்டமாக இருக்கும். டி20 கிரிக்கெட்டில் வான வேடிக்கைக்கு பஞ்சமே இருக்காது. இதில் அதிரடியாக விளையாட முடியும். ரன்களை குவிக்க முடியும். அப்படி ஒரு போட்டியை நேற்று பார்த்திருக்கலாம். ஆம், ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா 297 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 111 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களும், ரியான் பராக் 34 ரன்களும் எடுத்தனர்.
இது அல்லவா கிரிக்கெட் என்று துள்ளி குதித்து கொண்டாடும் வகையில் இந்திய அணியின் பேட்டிங் இருந்தது. அதே போன்று வங்கதேச வீரர்களை அடிக்க விடாமலும் இந்திய பவுலர்கள் பந்து வீசினர். ஆனாலும் ஒரு சில பீல்டிங்கும் மோசமாக இருந்தது. சில கேட்சுகளையும் தவறவிட்டனர்.
இந்தப் போட்டியை பார்க்காதவர்கள் திரும்ப ஜியோ சினிமா சென்று ஹைலைட்ஸ் பார்த்து ரசிங்க. இந்தப் போட்டியில் இந்திய அணி 18 ரன்களில் உலக சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. 297 ரன்கள் அடிக்க முடிந்த இந்திய அணியால் கடைசியில் 18 ரன்கள் அடிக்க முடியவில்லை. 3 சிக்ஸர்கள் அடிச்சிருந்தால் இன்னிக்கு இந்தியா தான் நம்பர் 1. டி20 உலகக் கோப்பையும் நம்ம கிட்ட தான் இருக்கு. ஐசிசி டி20 அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தான் நம்பர் 1.
அதோடு 18 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் மற்றொரு உலக சாதனையையும் படைத்திருக்கலாம். பரவாயில்லை. இந்தப் போட்டியில் 297 ரன்கள் குவித்ததன் மூலமாக இன்னொரு சாதனையை படைத்திருக்கிறது. அதாவது அதிக முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த அணிகளின் பட்டியலில் இந்தியா தான் 37 முறை அடித்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா எல்லாம் டாப் 10 இடங்களில் இருக்கிறது. 3 மற்றும் 4ஆவது இடங்களில் முறையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச ஜாம்பவான்கள் முதல் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரையில் டி20 கிரிக்கெட்டில் 200க்கும் அதிகமாக ரன்கள் குவித்த டாப் 5 அணிகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க…
யார்க்ஷையர் – 31
சிறந்த வரலாற்றையும், தரமான கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்குவதில் நல்ல பெயர்களை கொண்ட யார்க்ஷயர் 200 ரன்களுக்கு மேல் 31 முறை குவித்து டாப் 5ல் இடம் பெற்றுள்ளது. இந்த இங்கிலிஸி கிரிக்கெட் டீம் ஆனது சிறந்த பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள நிலையில் தேவைப்படும் போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 200 ரன்கள் மேல் குவிக்கிறது.
200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்ற எண்ணமானது ஆரம்பம் முதல் கடைசி வரையில் நின்று விளையாடும் வீரரின் மனதில் இருக்கிறது. அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறையும் பிரமிக்க வைக்கிறது. பலம் வாய்ந்த அணிகளுக்கு போட்டியாக யார்க்ஷயர் அணி உருவாகி இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 33
ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட டிராபி அடிக்காத அணி என்ற மோசமான சாதனையை கொண்டிருக்கும் ஆர்சிபி அதிக முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த அணிகளின் பட்டியலில் 4ஆவது இடத்திலிருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் சிறந்த பேட்டிங் லைன் அப் இருந்தது. அதாவது ஆர்சிபியில் விராட் கோலி, கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெ என்று ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருந்தனர்.
என்னதான அவர்கள் அதிக ரன்கள் குவித்தாலும் மோசமான பந்து வீச்சின் காரணமாக தோல்வியை தழுவியிருக்கின்றனர். பேட்டிங் நன்றாக இருந்தால் பவுலிங் மோசமானதாக இருக்கும். பவுலிங் லைன் அப் சூப்பரா இருந்தால் பேட்டிங்கில் கோட்டைவிடும். இதுதான் இன்று வரை ஆர்சிபி டிராபி அடிக்காததற்கு காரணம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: 35
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 200 ரன்களுக்கு மேல் 35 முறை அடித்து அணிகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. மஞ்சள் ஆர்மியில் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், எம்.எஸ்.தோனி, வாட்சன் என்று பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தனர். தற்போது தோனி இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறார். 5 முறை டிராபி அடித்த 2ஆவது அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது.
சோமர்செட் – 36
200 ரன்களுக்கு மேல் குவித்த அணிகளின் பட்டியலில் சோமர்செட் அணி 2ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் 200 ரன்களுக்கு மேல் 36 முறை சோமர்செட் அணி அடித்துள்ளது. சிறந்த சர்வதேச அணியாக இல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட் அணியாக சோமர்செட் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.
சோமர்செட் அணியின் பலமே பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் தான். எளியில் பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்கும் டேலண்ட் அவர்கள் பெற்றிருக்கின்றனர். பயமில்லாத தொடக்க வீரர்கள் முதல் சிறந்த பினிஷர்கள் வரையில் சோமர்செட் அபாரமான ஸ்கோரை எட்டும் கலையில் சிறந்து விளங்குகிறது.
இந்தியா – 37 முறை
இதுவரையில் 36 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்த இந்தியா, ஹைதராபாத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 297 ரன்கள் குவித்ததன் மூலமாக 37ஆவது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.
இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்துள்ளனர். இவர்களுக்கு பின் வந்த ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் இருவரும் அதிரடி காட்டவே இந்தியா 297 ரன்களை குவித்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் 22 சிக்சர்களும், 25 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் மட்டும் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இது அவரது முதல் டி20 சதம். 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளும் அடித்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரையில் இந்திய அணியில் எந்த விக்கெட் கீப்பரும் டி20 கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.