
India Women vs Australia Women, Womens T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை படைத்துள்ளார். இம்மைதானத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைக்க தயாராகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்றின் மிக முக்கியமான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா போன்றோர் அடங்கிய இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மிகவும் கடினமானது.
2020 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. இந்த முறை அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்க தீப்தி சர்மா, ரேணுகா சிங் தாக்கூர் போன்றோர் தயாராகி வருகின்றனர்.
அரையிறுதி இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் ஹர்மன்பிரீத் அணி
இந்த டி20 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. ஆனால், அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கடைசியாக விளையாடிய போட்டியில் இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நிகர ரன் ரேட் +0.576 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு நிகர ரன் ரேட்டில் பின்தங்கியிருந்தது இந்தியா. இலங்கையை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தற்போது நல்ல நிலையில் ஹர்மன்பிரீத் அணி உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.
தற்போது புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் இலங்கை விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தானுக்கும் அரையிறுதி வாய்ப்பு இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
2ஆவது இடத்திற்கு தான் இந்தியாவும் நியூசிலாந்தும் போட்டி போட்டுகின்றன. இரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளுடன் 2 மற்றும் 3ஆவது இடங்களை பிடித்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா வெளியேறும். நியூசிலாந்து அரையிறுதிக்கு செல்லும்.
ஷார்ஜாவில் இந்தியாவுக்கு சாதகமா?
இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஷார்ஜாவில் எந்தப் போட்டியையும் விளையாடவில்லை இந்தியா. ஆனால், அது பிரச்சனையாக இருக்காது. ஏனெனில், ஷார்ஜா மைதானம் மெதுவானது, பந்து தாழ்வாக வருகிறது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
omens T20 World Cup 2024
இந்திய அணி இன்றைய போட்டியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கலாம். ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தயலா வ்லாமின்க் ஆகியோர் காயம் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவது சந்தேகம். இதனால் இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். இதே போன்று நியூசிலாந்தும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் 6 புள்ளிகள் பெறும். ஆதலால், இன்றைய போட்டி இந்திய அணிக்கு சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் நெட் ரன் ரேட்டில் முன்னேற முடியும்.
இந்தியாவிற்கான அரையிறுதி பாதை எப்படி?
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கண்டிப்பாக வெற்றி.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டும்.
இந்த 2ம் நடந்தால் மட்டுமே மகளிர் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.