
Team India Whitewashed Bangladesh 3 Match T20 Series: 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்று வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, இப்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது. ஆல் ரவுண்டர் செயல்பாட்டுடன் வங்கதேசத்தை மூன்று போட்டிகளில் வீழ்த்தியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் ரன்கள் சுனாமியை ஏற்படுத்தினர்.
இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 297 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு ஐசிசி முழுநேர அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு 2019 இல் அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 278/3 ரன்கள் எடுத்திருந்தது. ஒட்டுமொத்த சாதனையைப் பார்த்தால், 2023 இல் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 314/3 ரன்கள் எடுத்தது. ஆனால், நேபாளம் ஐசிசி முழுநேர உறுப்பு அணி அல்ல.
இந்தியா ஹாட்ரிக் வெற்றி
முதலில் பேட் செய்து இந்தியா நிர்ணயித்த 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டி20யில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போது ஹைதராபாத்தில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியுடன் வங்கதேசத்துடனான தொடர் முடிவடைந்தது.
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் பேட்டிங் சூரசம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் மோசமாக இருந்தது. 4 ரன்கள் எடுத்த பிறகு அவர் அவுட்டானார். தன்சிம் ஹசன் வீசிய பந்தில் மெஹதி ஹசன் மிராஜ் கேட்ச் பிடித்தார். அதன் பிறகு ரன்கள் புயல் தொடங்கியது. சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்து வங்கதேச பந்து வீச்சாளர்களைச் சிதறடித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 70 பந்துகளில் 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
40 பந்துகளில் சஞ்சு சாம்சன் சதம்
சஞ்சு சாம்சன் தனது இன்னிங்ஸில் ஃபோர்கள், சிக்ஸர்களால் மைதானத்தை அதிர வைத்தார். இரண்டாவது ஓவரில் டஸ்கின் அஹ்மத் வீசிய பந்துகளில் தொடர்ச்சியாக 4 ஃபோர்கள் அடித்தார். 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பிறகு சிக்ஸர்களால் விளாசினார். ரிஷத் ஹுசைன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்தார்.
டி20 சர்வதேச போட்டிகளில் சாம்சன் வெறும் 40 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். இது அவரது முதல் டி20 சதம் ஆகும். டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். தோனி, ரிஷ்ப பண்ட், கேஎல் ராகுல் என்று யாரும் இதுவரையில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை. சாம்சன் அதிவேகமாக சதம் அடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த நிலையில் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 11 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் அடங்கும். 236.17 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்கள் சேர்த்தார்.
சூர்யகுமார், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா சூறாவளி இன்னிங்ஸ்
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அற்புதமான பேட்டிங்கால் அசத்தினார். சதம் அடிப்பார் போல் தோன்றியது, ஆனால் 75 ரன்களில் அவுட்டானார். 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் சூர்aயகுமார் 8 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள் அடித்தார். சூர்யாவின் ஸ்ட்ரைக் ரேட் 214.29 ஆக இருந்தது.
ரியான் பராக், ஹர்திக் பாண்டியாவும் அதிரடி இன்னிங்ஸ் ஆடினர். சாம்சன், சூர்யா போல வெடித்துச் சிதறினர். ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு ஃபோர், 4 சிக்ஸர்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக் 4 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள் அடித்தார். ரிங்கு சிங் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளித்த மாயங் யாதவ்-ரவி பிஷ்னாய்
வங்கதேச இன்னிங்ஸைப் பார்த்தால், அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர் மாயங் யாதவ் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பர்வேஸ் ஹுசைனை அவுட் செய்தார். 15 ரன்களில் தன்சிம் ஹசன் அவுட்டானார், கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ 14 ரன்களில் அவுட்டானார்.
விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்தார். 8 ரன்களில் மஹ்மதுல்லா, 3 ரன்களில் மெஹதி ஹசன் அவுட்டானார்கள். ரிஷத் ஹுசைன் கணக்கைத் திறக்கவில்லை. தவ்ஹித் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னாய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மாயங் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.