ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், இதற்கான பதிலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
24
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்த நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து நீண்ட நாட்களாக இருந்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய விளையாட்டு அமைச்சகம் இது தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது.
இருதரப்பு தொடரில் இந்தியா விளையாடாது
இந்தக் கொள்கையின்படி, இந்திய கிரிக்கெட் அணி 2025 செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் பங்கேற்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் எந்தவொரு இருதரப்பு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்காது. இதேபோல் பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நடைபெறும் இருதரப்பு போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது.
34
பன்னாட்டு தொடரில் இந்தியா பங்கேற்கும்
ஆசிய கோப்பை, உலகக் கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற பன்னாட்டு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பாகிஸ்தானில் நடைபெறும் பன்னாட்டு தொடர்களில் இந்திய அணிகள் பங்கேற்பது குறித்து, அந்தந்த சூழ்நிலைகளைப் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா 2030 காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் 2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஒலிம்பிக் சாசனத்தை மதிப்பது மற்றும் பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம். இதனால், பன்னாட்டு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எல்லையில் உயிர்த்தியாகம் செய்யும் நமது ராணுவ வீரர்களை நினைத்து பாருங்கள் என்று முன்னாள் வீரர்கள் ஹர்பஜங் சிங், கேதர்ஜாதவ் ஆகியோர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.