ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், நடந்து முடிந்த 13வது சீசனில் தான் முதன்முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா ஆடாதது தான்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர். ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, பால்கனி இல்லாத அறை ஒதுக்கியதற்காக அணி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியின் விளைவாக அணி நிர்வாகத்துடன் கருத்து முரண் ஏற்பட்டதால், ஐபிஎல்லில் ஆடாமல் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.
இதையடுத்து இனிமேல் ரெய்னா சிஎஸ்கேவில் ஆடமாட்டார். ரெய்னாவை தக்கவைக்கும் அல்லது இனியும் அவரை அணியில் நீடிக்கவைக்கும் மனநிலையில் சிஎஸ்கே இல்லை என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. 13வது சீசனின் படுதோல்விக்கு பின்னரே, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி மறுகட்டமைப்பு செய்யப்படும் என்பதை கேப்டன் தோனியும் அணி நிர்வாகமும் உறுதி செய்துவிட்டனர்.
எனவே ரெய்னா கழட்டிவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”சிஎஸ்கே அணி ரெய்னா குறித்து கடினமான முடிவை எடுக்கவுள்ளது. கடந்த காலங்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார் ரெய்னா. ஆனால் அணியை மறுகட்டமைப்பு செய்யவுள்ளதால், மொத்த ரூ.85 கோடியில் ரூ.11 கோடியை ரெய்னாவுக்கு மட்டுமே முடக்க முடியாது” என்று சிஎஸ்கே சோர்ஸ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெய்னாவை கழட்டிவிட்டு, பின்னர் ஏலத்தில் அதைவிட குறைவான தொகைக்கு எடுக்கும் முனைப்பில் சிஎஸ்கே இருக்கலாம். ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட், 33.34 என்ற சராசரியுடன் 5368 ரன்களை குவித்துள்ளார் ரெய்னா. ஐபிஎல்லின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ரெய்னா முக்கியமானவர்.