#AUSvsIND 2வது இன்னிங்ஸில் ஆஸி.,யை பொட்டளம் கட்டிய சிராஜ், தாகூர்..! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

First Published | Jan 18, 2021, 2:31 PM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில், சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூரின் அபாரமான பவுலிங்கால் 294 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி 369 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட் என யாருமே பெரிய இன்னிங்ஸ ஆடவில்லை. தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டும் 44 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இந்திய அணி 186 ரன்களுக்கே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஷர்துல் தாகூரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 7வது விக்கெட்டுக்கு 123 ரன்களை குவித்தனர். ஷர்துல் தாகூர் 67 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் அடித்தது.
Tap to resize

33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடக்க வீரர்கள் வார்னரும் மார்கஸ் ஹாரிஸூம் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், மார்கஸ் ஹாரிஸை ஷர்துல் தாகூர் 38 ரன்களுக்கு வீழ்த்த, வார்னரை 48 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் லபுஷேனை 25 ரன்களுக்கு வீழ்த்திய சிராஜ், மேத்யூ வேடை டக் அவுட்டாக்கி அனுப்பினார். ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நிலையில், அவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல், 55 ரன்களுக்கு சிராஜ் வீழ்த்தினார்.
அதன்பின்னர் டிம் பெய்ன்(27), கேமரூன் க்ரீன்(37), நேதன் லயனை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். இதையடுத்து 294 ரன்களுக்கு ஆஸி., அணி 2வது இன்னிங்ஸில் சுருண்டது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் ஐந்து விக்கெட். ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மொத்தமாக ஆஸி., அணி 326 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 327 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து சிறப்பாக தொடங்கினார். ஆனால் 2வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டதால், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசமுடியாமல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஓவர்கள் வீசப்பட்டிருந்தால், இன்றே கிட்டத்தட்ட ஆட்டத்தின் முடிவு தெரிந்திருக்கும். இந்திய அணியின் பேட்டிங் டெப்த் நன்றாக இருப்பதால், 327 ரன்கள் என்ற இலக்கு சவாலானதுதான் என்றாலும் இந்திய அணி அடித்திருக்கக்கூடும். 4ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் கூட இந்த இலக்கை இந்திய அணியால் அடித்துவிடமுடியும். அப்படி இலக்கை எட்ட முடியவில்லை என்றாலும், சிட்னி டெஸ்ட்டை போல இந்திய அணி டிராவாவது செய்துவிடும்.

Latest Videos

click me!