
இந்தியாவில் ஒரு நாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து லக்னோவில் நடந்த 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன் சேர்த்தார். அவர், 17 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன்கள் வரை சேர்த்துள்ளது.
ஒருபுறம் வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அனைத்து பார்மேட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். அவர் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் அடித்துள்ளனர். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 126 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் உள்ளார்.
அவர், 63 பந்துகளில் 7 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 126 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் (122 ரன்கள் நாட் அவுட் - ஆப்கானிஸ்தான் எதிரணி) சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 118 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் 23 வயதில், அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை சுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார்.
இளம் வயதில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் (208).
இளம் வயதில் டி20 போட்டியில் அதிக ரன்கள் (126 ரன்கள் நாட் அவுட்) குவித்த இந்தியர் என்ற சாதனை
தொடர்ந்து சாதனை படைத்து சுப்மன் கில்லை, கிரிக்கெட்டின் இளவரசன் என்று பெயரிட்டுள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி என்பது அனைவரும் அறிந்தது. அந்த வரிசையில் கிரிக்கெட்டின் இளவரசன் சுப்மன் கில் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இந்திய அணி 5ஆவது முறையாக டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இவ்வளவு ஏன், இந்த ஆண்டில் நடந்த 12 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசியுள்ளார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி தான் அந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 122 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.