Published : Jul 11, 2025, 09:08 PM ISTUpdated : Jul 11, 2025, 10:03 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய கேப்டன் சுப்மன் கில் நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்ற இந்திய அணி வீரர்களும் நடுவர்கள் மீது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள்.
IND vs ENG 3rd Test: Shubman Gill Heated Argument With The Umpires
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சூப்பர் சதம் (104 ரன்) விளாசினார். ஜேமி ஸ்மித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56) அரை சதம் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 27 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
24
நடுவர்களுடன் சுப்மன் கில் வாக்குவாதம்
இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது புதிய பந்து வெறும் 10.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், நடுவர்கள் அந்த பந்தை மாற்ற முடிவு செய்தனர். பந்து அதன் வடிவத்தை இழந்ததாக கூறி அதை மாற்றினார்கள். நடுவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்திய அணி வீரர்கள் அதிருப்தி
நடுவர்கள் மாற்றிய பந்தும் எதிர்பார்த்தபடி இல்லாததால் இந்திய அணி வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். முகமது சிராஜும் இந்த பந்து மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த தொடரில் இந்திய வீரர்கள் ஏற்கனவே டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர். டியூக்ஸ் பந்துகள் தொடர்பாக இந்த தொடரில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இங்கிலாந்து அணி வீரர்களும் ப்ந்துகளை மாற்றம் செய்யும்படி நடுவர்களிடம் அடிக்கடி கோரிக்கை விடுத்தனர்.
34
சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
சுப்மன் கில் நடுவரிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஐசிசி நடத்தை விதிமுறைகளின்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படலாம். ஆகையால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே ரிஷப் பன்ட் பந்து மாற்றம் செய்யாததற்கு நடுவர்களிடம் கோபத்தை வெளிக்காட்டி இருந்தார்.
அதாவது முதல் டெஸ்ட் 3ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்தை மாற்றும்படி கள நடுவர் பால் ரீஃபலிடம் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பும்ரா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
பந்தை வாங்கி பார்த்த நடுவர், 'பந்து நன்றாக உள்ளது. புதிய பந்து வாங்குவதற்கான நேரம் இன்னும் வரவில்லை' என்று தெரிவித்தார். அப்போது ரிஷப் பண்ட் நடுவர் பால் ரீஃபலிடம் சென்று பந்தை மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு நடுவர் 'பந்து நன்றாக உள்ளதால் இப்போது மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரிஷப் பண்ட் நடுவரிடம் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தான் கையில் வைத்திருந்த பந்தை அவரிடம் கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டு சென்றார். பண்ட்டின் இந்த செயலால் நடுவர் அதிர்ச்சி அடைந்தார். ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.