அந்த ஒரு குறையை மட்டும் சரி செஞ்சுட்டா, ஷ்ரேயாஸ் ஐயர் தான் அடுத்த கேப்டன்! செம திறமையான வீரர்- ஸ்காட் ஸ்டைரிஸ்

First Published Jul 21, 2022, 6:59 PM IST

ஷ்ரேயாஸ் ஐயர் மிகத்திறமையான பேட்ஸ்மேன்; அடுத்த கேப்டனாகக்கூட வாய்ப்புள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ள நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ், ஷ்ரேயாஸ்  சரிசெய்ய வேண்டிய குறையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் திறமையான வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். இந்தியாவிற்காக 5 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.
 

மிகத்திறமையான பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார். டெஸ்ட் அணியிலும் கூட இடம்பிடித்தார். எல்லா விதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடக்கூடிய, சூழலுக்கேற்ப ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஆனால் ஷார்ட் பிட்ச் பந்துகளை மட்டும் எதிர்கொள்ள திணறுகிறார். அவரது இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ளும் எதிரணிகள், ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியே அவரை வீழ்த்திவிடுகின்றன. தனது பலவீனம் எதிரணிகளுக்கு தெரிந்துவிட்டது என்பதை ஷ்ரேயாஸ் அறிந்திருந்தாலும், அவரால் அதை இதுவரை சரிசெய்து கொள்ள முடியவில்லை. இதுவே அவருக்கு பெரிய எதிரியாகவும் மாறிவிட்டது.

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அவருக்கான இடத்திற்காக போட்டி போடுவது, சூர்யகுமார் யாதவுடன். சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய இந்தியாவின் 360 ஆவார். எனவே அவருடன் போட்டியிட்டு, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், மிகச்சிறப்பாக ஆடியாக வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரின் பலவீனம் அம்பலப்பட, அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாட, இந்திய அணியின் ஆடும் லெவனில் இடத்தை இழந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆடவில்லை என்றால் மட்டுமே ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கிறது. 
 

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியுள்ள நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமைத்துவ பண்புகள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் ஷ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதற்காகவே, அவருக்கு இந்திய அணியில் முடிந்தவரை அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். 
 

ஷ்ரேயாஸின் பிரச்னை என்னவென்றால், ஷார்ட் பிட்ச் பந்துகள் தான். இது அனைவருக்கும் தெரிந்ததே. எதிரணி பவுலர்கள் அவருக்கு உடம்புக்கு நேராக ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்ஸர் பந்துகளை வீசி  வீழ்த்துகின்றனர். இதை சமாளிப்பதற்கான வழியை இன்னும் ஷ்ரேயாஸ் கண்டறியவில்லை. அதை அவர் விரைவில் செய்ய வேண்டும். இல்லையெனில் சுரேஷ் ரெய்னா மாதிரி ஆகிவிடுவார். சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆட திணறுவது தெரிந்தபின்னர், எதிரணிகள் அவரை ஷார்ட் பிட்ச் பந்துகளாலேயே வீழ்த்தினர். எனவே ஷ்ரேயாஸ் ஐயர் அவரது பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்

click me!