
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 4ஆவது நாளில் வங்கதேச கிரிக்கெட் வீரர் மோமினுல் ஹக் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் அடித்த 107 ரன்கள் தான் வங்கதேச அணி 233 ரன்களை குவிக்க உதவியது. ஜஸ்ப்ரித் பும்ராவின் சிறப்பான பவுலிங், ரோகித் சர்மா மற்றும் முகமது சிராஜின் சிறப்பான கேட்ச் ஆகியவற்றின் மூலமாக இந்தியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும் 4ஆவது நாளில், மோமினுல் ஹக் தனித்து நின்று சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
போட்டியின் போது மோமினுல் ஹக்கின் உயரம் குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கருத்து தெரிவித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்து பவுன்ஸராகி மோமினுல் ஹக்கின் ஹெல்மெட்டை தாக்கியது. இது குறித்து பண்ட் பீல்டர்களிடம் கேலி கிண்டல் செய்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சிரிக்காமல் இருக்க முடியவில்லை, மேலும் இந்த நகைச்சுவை மோமினுலின் கிரிக்கெட் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் மோமினுல் ஹக், 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் உள்பட 4200 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 4ஆவது வங்கதேச வீரர் என்ற சாதனையை தற்போது மோமினுல் ஹக் படைத்துள்ளார். கிரிக்கெட்டில் உயரமாக இல்லாமல் கூட விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான வீரர்கள் ஏராளமான இருக்கின்றனர் என்பதை அவர்களது சாதனைகள் எடுத்துக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்…
சுனில் கவாஸ்கர்:
லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சுனில் கவாஸ்கர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். அவர்களை எதிர்கொள்ளும் விதம், மதி நுட்பம் ஆகியவற்றிற்காக அனைவராலும் மதிக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சதங்கள் குவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் 1985ல் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்டில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்கள் குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் 34,357 ரன்கள் குவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில், குவாலியரில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தப் போட்டியில் 147 பந்துகளில் 25 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 200* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெம்பா பவுமா:
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெம்பா பவுமா 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்தார். முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக சதம் அடித்த முதல் தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை டெம்பா பவுமா படைத்தார். 2016 ஆம் ஆண்டு அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் எடுத்ததன் மூலமாக அறிமுக போட்டியில் சதம் அடித்த 3 தென் ஆப்பிரிக்கா வீரர்களில் பவுமாவும் ஒருவராக அறியப்பட்டார்.
குண்டப்பா விஸ்வநாத்:
இவரது உயரம் 5 அடி 3 அங்குலம். ஆனால் 1970களில் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் அனைவராலும் கொண்டாடப்பட்டர். 1967 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிரான தனது முதல் தர அறிமுகப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். அதோடு தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி முத்திரை பதித்தார். கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் 2008 ஆம் ஆண்டு C. K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இது பிசிசிஐ மூலமாக வழங்கப்படும் மிக உயரிய விருது.
டேவிட் பூன்:
டேவிட் பூன் 5 அடி, 3 அங்குலம் உயரம் கொண்டவர். கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் உயரம் முக்கியமில்லை. திறமை மட்டுமே போதுமானது என்பதை பல ஜாம்பவான்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் பூன், 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவ்வளவு ஏன், 181 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.