2026 ஐபிஎல் சீசன் முழுவதும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் பெஞ்சில் இருந்தார். கடைசியாக, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அர்ஜுன் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி முடிந்ததும், சச்சின் டெண்டுல்கர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், தன் மகன் அர்ஜுனின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் பதிவு
சச்சின் தனது பதிவில், 'வெல்டன் அர்ஜுன்! இந்த சீசனில் உன் திறமையை நம்பி, கடைசி வரை பொறுமையாகக் காத்திருந்து, கடினமாக உழைத்தாய். கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும், பாசிட்டிவாக இருந்ததைப் பார்க்க பெருமையாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 'கிரிக்கெட் உன் திறமையை சோதிப்பது போலவே, உன் பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். உன் கால்கள் தரையில் இருக்கட்டும். கிரிக்கெட் மீதான காதல் இப்படியே தொடரட்டும். எப்போதும் என் அன்பு உண்டு' என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எழுதியிருந்தார்.