ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

First Published Jul 13, 2022, 3:28 PM IST

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

கெனிங்டன் ஓவலில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது இங்கிலாந்து அணி. பும்ரா அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

111 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - தவான் ஜோடியே ஆட்டத்தை முடித்துவிட்டது. தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார் ரோஹித். ரோஹித்தின் அதிரடி அரைசதத்தால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்த போட்டியில் அடித்த 5 சிக்ஸர்களுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 250 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாஹித் அஃப்ரிடி (351 சிக்ஸர்கள்), கிறிஸ் கெய்ல்(331) மற்றும் சனத் ஜெயசூரியா(270) ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா(250* சிக்ஸர்கள்). 

click me!