
IPL 2025 Mega Auction Most Expensive Players : 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் எந்த அணியில் இடம் பெறுவார்கள் என்ற ஆர்வம் எழுந்தது. அதன்படி இந்த ஏலம் இந்திய அணி வீரர்களுக்கு அவர்களே எதிர்பார்க்காத தொகையில் அவர்களை ஏலத்தில் எடுத்து வைத்துள்ளது. இதில் ரூ.23 கோடிக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட டாப் 3 வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…
வெங்கடேஷ் ஐயர்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கூடுதல் கவனம் இருந்தது. அவர்களில் மத்தியப் பிரதேச ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முன்னாள் வீரரும் கூட. 2024 ஐபிஎல் தொடரில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கேகேஆர் அவரை விடுவித்தது.
ஆதலால், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு இந்த ஏலத்தில் பங்கேற்றார். அவரைச் சுற்றி ஏலத்தில் கடுமையான போட்டி இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெங்கடேஷ் ஐயரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர ஆர்வமாக இருந்தது. ஆனால் ஆர்.சி.பி 8 கோடி ரூபாய் விலைக்குப் போட்டியிட்டது. ஆனால் நைட் ரைடர்ஸ் போட்டியை விட்டுக்கொடுக்கவில்லை.
கே.கே.ஆர் விலை கூறியதும், ஆர்.சி.பி உடனடியாக பதிலளித்தது. அவர்களுக்கும் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் தேவை. எனவே வெங்கடேஷ் ஐயரின் விலை 17 கோடி ரூபாயை எட்டியது. பின்னர் கே.கே.ஆர் 19.25 கோடி ரூபாய் கூறியதும் ஏலம் சற்று நின்றது. ஆனால் மீண்டும் ஆர்.சி.பி விலை கூறியது. அதோடு நிற்கவில்லை. மீண்டும் 21 கோடி ரூபாய் கே.கே.ஆர் கூறியது. ஆர்.சி.பி இன்னும் போட்டியில் இருந்தது. கொல்கத்தா வெங்கடேஷ் ஐயரை அணிக்குள் கொண்டுவர மிகவும் ஆர்வமாக இருந்தது. இறுதியில், கே.கே.ஆர் ரூ. 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் இருந்த ரிஷப் பண்டை டெல்லி தக்க வைக்கவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சிஎஸ்கே, ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் ஆர்சிபி மற்றும் லக்னோ இடையில் போட்டி நிலவியது. அதன் பிறகு சிஎஸ்கே, எஸ் ஆர்ஹெச் அணிகளும் இணைந்தன. கடைசியில் ரூ.20.75 கோடிக்கு லக்னோ வாங்கியது. ஆனால், டெல்லி தங்களிடமிருந்த ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவே ரிஷப் பண்டின் டிமாண்ட் அதிகரித்தது.
எனினும், லக்னோ பிடிவாதமாக இருந்து ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை தட்டி தூக்கியது. இதற்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர் வாங்கியதே அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில் கொஞ்ச நேரத்திலேயே ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
இதுவரையில் டெல்லி அணியில் ரூ.16 கோடிக்கு விளையாடி வந்த பண்ட் இப்போது லக்னோ அணியில் ரூ.27 கோடிக்கு விளையாட இருக்கிறார். 2016 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பண்ட் 117 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 3284 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 128 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், 18 அரைசதங்கள் அடங்கும்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் இயருக்கு கடும் போட்டி நிலவியது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேகேஆர் அணியே போட்டியில் இறங்கியது. டெல்லி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் போட்டி போட்டன. கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்தார்.
2015 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரையில் 115 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 3127 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 51 சதங்கள் அடங்கும். ஆனால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2022 முதல் 2024 வரை 3 சீசன்களாக ரூ.12.25 கோடிக்கு விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயரின் சம்பளம் 2025 ஆம் முதல் ரூ.26.75 கோடியாக அதிகரித்துள்ளது.