IPL வரலாற்றில் 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து பஞ்சாப் அணி தனது முந்தைய சாதனையை இன்று முறியடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப்க்கான வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துள்ள பஞ்சாப் அணி, இந்த தொடரில் வெற்றியே பெறாத ஒரே அணியாக உள்ளது.
ஐபிஎல் தொடரில் நடந்த ஒரு த்ரில்லர் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கே.எல். ராகுலின் அதிரடி சதத்தால் டெல்லி அணி 265 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரியான்ஷ் ஆர்யாவின் சரவெடி பேட்டிங்கால், பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது T20 கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு, 2024-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் சேஸ் செய்த 262 ரன்கள் சாதனையை, அவர்களே முறியடித்துள்ளனர்.
24
தொடர் வெற்றி..
பிரப்சிம்ரன் சிங் 26 பந்துகளில் 76 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 17 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். நேஹால் வதேரா 15 பந்துகளில் 25 ரன்களும், ஷஷாங்க் சிங் 10 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரண்டு சுலபமான கேட்ச்களை கருண் நாயர் தவறவிட்டது, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. ஸ்கோர்: டெல்லி கேப்பிட்டல்ஸ் 264/2 (20 ஓவர்), பஞ்சாப் கிங்ஸ் 265/4 (18.5 ஓவர்).
34
பவர்-பிளே அதிரடி
பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் பிரியான்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் பவர்-பிளேயிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டனர். முதல் 6 ஓவர்களில் 116 ரன்கள் குவித்து மிரட்டினர். அகிப் நபி வீசிய முதல் ஓவரில் 15 ரன்களும், முகேஷ் குமார் வீசிய இரண்டாவது ஓவரில் 21 ரன்களும் விளாசினர். இதற்கிடையே, கேட்ச் பிடிக்க முயன்றபோது லுங்கி என்கிடிக்கு பலத்த காயம் ஏற்பட்டது டெல்லிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பவர்-பிளேயின் கடைசி ஓவரை வீசிய முகேஷ் குமாரின் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பிரப்சிம்ரன், பஞ்சாப் ஸ்கோரை 116-க்கு உயர்த்தினார். பவர்-பிளே முடிந்தவுடன் பிரியான்ஷ் ஆர்யாவை அக்சர் படேல் அவுட்டாக்கினார்.
சிறிது நேரத்தில் பிரப்சிம்ரன் மற்றும் கூப்பர் கொனோலி (10 பந்தில் 17) ஆகியோரை குல்தீப் யாதவ் வெளியேற்றினாலும், ஷ்ரேயாஸ் ஐயரும் நேஹால் வதேராவும் அதிரடியை தொடர்ந்தனர். 15-வது ஓவரில் நேஹால் வதேரா ஆட்டமிழந்தார். அதே ஓவரில், ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த கேட்ச்சை லாங்-ஆஃபில் கருண் நாயர் நம்பமுடியாத வகையில் கோட்டைவிட்டார். 16-வது ஓவரிலும் ஷ்ரேயாஸ் கொடுத்த கேட்ச்சை லாங்-ஆனில் கருண் நாயர் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. என்கிடி இல்லாததால், பஞ்சாப்பின் ரன்வேட்டையை டெல்லி பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவினர். டெல்லி தரப்பில் 2 ஓவர்கள் வீசிய முகேஷ் குமார் 45 ரன்களையும், அகிப் நபி 41 ரன்களையும் வாரி வழங்கினர்.
முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கே.எல். ராகுலின் ஆட்டமிழக்காத சதம் மற்றும் நிதிஷ் ராணாவின் அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. 47 பந்துகளில் சதம் அடித்த ராகுல், 67 பந்துகளில் 152 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ராகுல் - நிதிஷ் ராணா ஜோடி 95 பந்துகளில் 220 ரன்கள் சேர்த்தது. முன்னதாக, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 12 ரன்களில் இருந்தபோது ராகுல் கொடுத்த சுலபமான கேட்ச்சை பவுண்டரி லைனில் ஷஷாங்க் சிங் தவறவிட்டார். இதற்கு பஞ்சாப் அணி பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது.