கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் 16வது சீசனில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக யாரை ஆடவைக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இன்னும் ஒருசில மாதங்களில் தொடங்கவுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அண்மையில் கார் விபத்தில் சிக்கி மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் ஐபிஎல் 16வது சீசனில் ஆடமாட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா, டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஃபிலிப் சால்ட் ஆடலாம். அந்த அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் ஃபிலிப் சால்ட்டை ஆடவைப்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று ஓஜா தெரிவித்தார்.
ஃபிலிப் சால்ட்டை ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சால்ட் இங்கிலாந்து அணிக்காக 11 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் கேபிடள்ஸ் அணிக்காக ஆடும் ஃபிலிப் சால்ட், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்தில் 77 ரன்களை குவித்து அசத்த, அவரது அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.