ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27(நாளை) தொடங்கி செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. இந்திய அணியின் நட்சத்திர மற்றும் டாப் 3 பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. அதன்விளைவாகத்தான் குறைவான ஸ்கோரை அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.
ஷாஹீன் அஃப்ரிடி ஆடவில்லை என்றாலும் கூட, மற்ற ஃபாஸ்ட் பவுலர்களின் பெயரை சொல்லி இந்திய அணியை மிரட்டுகிறார் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்.
இதுகுறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், கடைசி 3 ஆண்டுகளாக முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகிய மூவரும் திட்டங்களை சரியாக செயல்படுத்தி பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரான நான், இருவருமே அவர்கள் மூவரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஷாஹீன் அஃப்ரிடி தான் இந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்துபவர். அவர் இல்லையென்றாலும் கூட, இவர்கள் மூவரும் இந்தியாவிற்கு டஃப் கொடுப்பார்கள் என்று சக்லைன் முஷ்டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.