Pakistan Cricket Team
கடந்த சில காலங்களாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் மோசமான செயல்பாடுகளால் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் சொந்த மண்ணிலேயே வீழ்ந்து மோசமான சாதனையை படைத்தது. இதனை பார்த்த பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் வங்கதேச கிரிக்கெட் அணி மிகவும் வலுவான அணியாக மாறிவிட்டது என நினைத்தனர். ஆனால் அது உண்மை கிடையாது, வங்கதேசம் வலுவடையவில்லை, பாகிஸ்தான் அணி தான் பலவீனமடைந்துவிட்டது என இந்திய கிரிக்கெட் அணி நிரூபித்து காட்டியுள்ளது.
Pak Vs Ban
பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் செய்துவிட்டோம் என்ற கெத்தோடு இந்தியாவையும் அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி காட்டுவோம் என்று பேசிக்கொண்டு இந்தியாவிற்குள் வந்த வங்கதேச வீரர்கள் இப்போது இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அமைதி காக்கின்றனர். காரணம் முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 2 நாட்கள் ஆட்டம் தடை பட்ட நிலையில், போட்டி சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் சூழலை மாற்றி அமைத்து கடுமையாக போராடி இரண்டாவது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
Pakistan Test Cricket
வங்கதேசத்தை இரு போட்டிகளிலும் இந்தியா வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் அணி மீது அதன் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் சர்ப்ராஸ் கூறுகையில், எந்த சூழலிலும் வெற்றி பெற்றாகவேண்டும் என்ற இந்திய வீரர்களின் மனநிலையை பார்த்தாவது உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். முதலில் தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியில் வாருங்கள். ஆட்டத்தின் போக்கை எப்படி நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வது என பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Pakistan Test Cricket
இதனிடையே பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வருகின்ற 7ம் தேதி விளையாட உள்ளது. தங்கள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பகிஸ்தான் களம் இறங்குகிறது. ஆனால், வங்தேசத்திடமே தோற்ற பாகிஸதான் இங்கிலாந்து அணியையா சமாளிக்கும்? என்று ரசிகர்கள் இப்போதே தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Pakistan Test Cricket
முன்னாள் வீரர்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இங்கிலாந்து தொடர் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுக்கும் வரை அணிக்காக விளையாடுவேன் என்று கூறினீர்கள் உங்களுக்கென்று கட்டுப்பாடோ, கண்ணியமோ கிடையாதா? தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவீர்களா என்று கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதால் சலசலப்பு ஏற்பட்டது.