
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் இன்று நடந்தது. இதில், இடம் பெற்ற 333 வீரர்களில் 72 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். IPL 2024 Player Auction: தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.7.40 கோடிக்கு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்!
இந்த 72 வீரர்களில் 30 வெளிநாட்டு வீரர்கள், 42 இந்திய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த ஏலத்தில் எந்த ஒரு வீரரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டது தான்.
மிட்செல் ஸ்டார்க்:
ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிக தொகைக்கு அதுவும் 24 கோடிக்கு அதிகமாக எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒரு ஆஸ்திரேலியா வீரர் இத்தனை கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கொல்கத்தா அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் இவர் மட்டுமே.
பேட் கம்மின்ஸ்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனானது. அந்த வகையில் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் என்ற முறையில் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.
டேரில் மிட்செல்:
உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேரில் மிட்செல் இந்தியாவிற்கு எதிராக 2 முறை சதம் அடித்து சாதனை படைத்தார். ஏற்கனவே நியூசிலாந்து வீரர்களான டெவோன் கான்வே இருக்கும் நிலையில் உலகக் கோப்பையில் ஜொலித்த ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதன் பிறகு கடைசியாக டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஹர்ஷல் படேல்:
ஆர்சிபி அணியில் விளையாடி வந்த ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதற்கு முன்னதாக கடந்த 2 சீசன்களாக ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆர்சிபி அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் படேல் 14 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்தார். இதுவரையில் விளையாடிய 91 போட்டிகளில் மொத்தமாக அவர் 111 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், தான் அவர் மீது நம்பிக்கை வைத்து பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது
அல்சாரி ஜோசஃப்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சார் ஜோசஃப்பை ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவர் அல்சாரி ஜோசஃப். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றிய நிலையில் பெரிதாக சோபிக்காத நிலையில் தான் குஜராத் அவரை விடுவித்தது. இந்த நிலையில் தான் அவரை ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது.
ஸ்பென்சர் ஜான்சன்:
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை ஏலம் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கடுமையான் போட்டி போட்டன. அவர் தனது அடிப்படை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்திருந்தார். இந்த நிலையில் தான், அவரை ரூ.10 கோடி கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக கருதப்படுகிறார். ஸ்பென்சர் ஜான்சனை ஏலம் எடுக்க போட்டி போட்ட டெல்லி மற்றும் குஜராத். அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயித்த நிலையில் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்த டைட்டன்ஸ்.
சமீர் ரிஸ்வி:
சிஎஸ்கே அணி ஒரு வீரரை ஏலம் எடுக்கிறது என்றால் அவர் எப்படிப்பட்ட வீரராக இருப்பார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். யார் அந்த 20 வயது வீரர் என்று பார்த்தால், உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டி நடந்தது. டிஎன்பிஎல் தொடர் போன்று நடந்த இந்த தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக சமீர் ரிஸ்வி விளையாடினார். இதில், அவர் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால், விளையாடும் பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரீலீ ரோஸோவ்:
ஆரம்பத்தில் ஏலம் எடுக்கப்படாமல் இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ரீலி ரோஸோவை டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி போட்டன. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணியே அவரை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.4.6 கோடிக்கு டெல்லி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரீலீ ரோஸோவை டெல்லி அணி விடுவித்த நிலையில், அவர் தற்போது பஞ்சாப் அணியில் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 209 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 82* ரன்கள் எடுத்துள்ளார்.
ஷாருக் கான்:
கடுமையான போட்டிகளுக்கு நடுவில் ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.5.25 கோடிக்கு தமிழக வீரரான ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ.9 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஷாருக் கான் 14 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 41 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ரோவ்மன் பவல்:
ஐபிஎல் 2024 தொடருக்கான முதல் வீரராக ரோவ்மன் பவல் ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி அணிக்காக ரூ.2.80 கோடிக்கு விளையாடி வந்த ரோவ்மன் பவலை ரூ.7.40 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. டெல்லி அணியில் 3 போட்டியில் மட்டுமே விளையாடி 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெரிதாக ஒன்றும் விளையாடாத ரோவ்மன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.
குமார் குஷாக்ரா:
ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பரான குமார் குஷாக்ராவை கடுமையான போட்டிகளுக்கு நடுவில் டெல்லி கேபிடல்ஸ் ரூ.7.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 19 வயதான அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தியோதர் டிராபியில் 5 இன்னிங்ஸ்களில் 109.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 227 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து ரூ.7.20 கோடிக்கு டெல்லி அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.