
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் (104 ரன்கள்) சதம் விளாசினார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ம் நாளில் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். பொறுமையாகவும் அதிரடியாகவும் விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து அசத்தினார். 7 பவுண்டரி 1 சிக்சருடன் 86 பந்தில் அவர் அரைசதம் விளாசினார். மறுபக்கம் கே.எல்.ராகுலும் தனது டிரேட் மார்க் ஷாட்களை அடித்தார். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். ஆனால் நன்றாக விளையாடி அரை சதம் (74 ரன்) அடித்த ரிஷப் பண்ட் கே.எல்.ராகுல் சதம் அடிப்பதற்காக தேவையில்லாமல் ஒரு ரன்னுக்காக வேகமாக ஓடி பென் ஸ்டோக்ஸின் சூப்பர் த்ரோவில் ரன் அவுட்டானார்.
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தை விளாசினார். 100 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல் சோயிப் பஷிர் பந்தில் ஹாரி ப்ருக்கிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்திய அணி 254/5 என்ற நிலையில் இருந்தது. பின்பு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், நிதிஷ்குமார் ரெட்டியும் சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணி 300 ரன்களை கடக்க உதவினார்கள். பொறுப்பாக விளயாடிய ரவீந்திர ஜடேஜா 89 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார்.
இருவரும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 30 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார். பின்னர் வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் சேர்ந்து ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 376 ஆக உயர்ந்தபோது ஜடேஜா 72 ரன்னில் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து ஆகாஷ் தீப் (7), பும்ரா (0), வாஷிங்டன் சுந்தர் (23) என வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தும் தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் இந்தியாவும் அதே ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2/0 என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் சதம் விளாசிய கே.எல்.ராகுல் லார்ட்ஸ் மைதானத்தில் 2 சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதேபோல் ரவீந்திர ஜடேஜா 15வது அரைசதத்துடன், WTC-யில் 15 அரைசதங்களை அடித்த மற்றும் 130க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.