இந்திய வீரர் ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி விவியன் ரிச்சர்ட்ஸ், தோனி சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் வீரர் தோனியின் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சமன் செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர் அரை சதம் (74 ரன்கள்) விளாசிய ரிஷப் பன்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
24
ரிஷப் பண்ட் சூப்பர் இன்னிங்ஸ்
இந்தியா 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதல் பொறுமையாகவும், அதே நேரத்தில் சற்று அதிரடியாகவும் விளையாடினார். 83 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 112 பந்தில் 74 ரன்கள் எடுத்து ரன் அவுட்ட்டானார். முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறினார்.
விக்கெட் கீப்பிங்கின்போது காயம்
அதாவது இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது 34வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா ஒரு பந்தை லெக் சைட் திசை நோக்கி வீசினார். ரிஷப் பண்ட் அந்த பந்தை பாய்ந்து பிடித்து தடுக்க முயன்றபோது பந்து அவரது இடது கை சுண்டு விரலில் பலமாக தாக்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார். உடன்டியாக அணியின் மருத்துவ ஊழியர்கள் களத்துக்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் வலி அதிகமாக இருந்ததால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யாமல் வெளியேறினார். மாற்று வீரர் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
34
தோனி சாதனை சமன்
இதனால் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், சூப்பராக பேட்டிங் செய்து அரை சதம் அடித்த ரிஷப் பண்ட் தோனி சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்தில் ரிஷப் பண்ட் 20 இன்னிங்ஸ்களில் 8வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தோனி இங்கிலாந்தில் 23 இன்னிங்ஸ்களில் 8 அரை சதம் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் அதை சமன் செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜான் வெய்ட் 27 இன்னிங்ஸ்களில் 7 அரைசதங்களும், ஆஸ்திரேலியாவின் ரோட்னி மார்ஷ் 35 இன்னிங்ஸ்களில் 6 அரை சதங்களும், தென்னாப்பிரிக்காவின் ஜாக் கேமரூன் 14 இன்னிங்ஸ்களில் 5 அரை சதங்களும் அடித்துள்ளனர்.
இதேபோல் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸின் சிக்ஸர் சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 35வது சிக்சர் அடித்த ரிஷப் பண்ட், 34 சிக்சர்கள் அடித்திருந்த விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மாவுடன் பந்த் சமன் செய்தார்.
பெரும் சாதனைக்கு 2 சிக்சர் மட்டுமே தேவை
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 சிக்சர்களை விளாசியுள்ள நிலையில், ரிஷப் பண்ட் அதை சமன் செய்துள்ளார். ரோஹித்தின் 67 இன்னிங்ஸ்களை உடன் ஒப்பிடும்போது, பண்ட் வெறும் 46 டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் (90 சிக்சர்கள்) விளாசிய வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்க பண்ட்டுக்கு இன்னும் 2 சிக்சர்கள் மட்டும் தான் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.