இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பில்லையா?

First Published Jan 10, 2023, 11:53 AM IST

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.

பும்ரா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. டி20 தொடரில் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தொடக்க வீரர்கள்: ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்:

சுப்மன் கில்லுடன் தான் ஓபனிங் இறங்குவதில் ரோகித் சர்மாக தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் போட்டிகளில் இஷான் கிஷான் இன்னும் சரிவர ஆடவில்லை. ஒரேயொரு போட்டியைத் தவிர. அதுவும் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது ஒரு நாள் போட்டியில் 210 ரன்கள் குவித்தார். ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் உள்பட 57.25 சராசரியில் 687 ரன்கள் குவித்து சுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார். அதுமட்டுமின்றி உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்னதாக அனைவரது பார்வையும் சுப்மன் கில் மீது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் - விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல்:

இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அதையே இந்தப் போட்டியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர்:

கடந்த ஆண்டில் அனைத்து பார்மேட்டுகளிலும் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்தவராக கருதப்படுகிறார். சூர்யகுமார் யாதவ்வை போன்று தனது சிறப்பான பங்களிப்பை ஒரு நாள் போட்டியில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

கே எல் ராகுல்:

இந்தப் போட்டியில் சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்கள். இதன் காரணமாக கே எல் ராகுல் 5 ஆவதாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடந்த 13 ஒரு நாள் போட்டிகளில் ராகுல் 5ஆவதாக களமிறங்கி 548 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 5 அரைசதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆல் ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர்

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை ஹர்திக் பாண்டியா நிரூபித்துள்ளார். இந்திய அணியில் இருக்கும் முக்கியமான பிளேயர்களில் இவரும் ஒருவர். இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவர் வீசி இலங்கை வீரர்களை திணற வைத்தார். அதுமட்டுமின்றி கடைசி போட்டியில் 2 விக்கெட்டுகள் வரையில் கைப்பற்றினார்.

அக்‌ஷர் படேல்:

கடந்த டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர்களில் அக்‌ஷர் படேலும் ஒருவர். ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு அக்‌ஷர் படேல் தகுதியானவர்.
 

வாஷிங்டன் சுந்தர்:

அக்‌ஷர் படேலுடன் ஒப்பிடும் போது வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலேயும் ஒரு நாள் போட்டியில் அவரது பங்களிப்பு மிக மிக முக்கியம்.
 

பந்துவீச்சாளர்கள்: முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சகால்:

காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி தற்போது தான் அணிக்கு திரும்பியுள்ளார். ஆகையால், அவரது உடல் தகுதி எப்படி இருக்கும் என்பது குறித்து முதல் போட்டியில் தான் தெரியவரும்.

முகமது சிராஜ்

சிராஜ், சிறப்பாக பந்து வீசி வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிராஜ் சிறப்பாக பந்து வீசி அனைவரது பார்வையும் தன் மீது விழ வைத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த 15 ஒரு நாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வரையில் கைப்பற்றியுள்ளார்.
 

யுஸ்வேந்திர சகால்:

சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சகாலுக்கு இதுதான் கடைசி சந்தர்ப்பம். குல்தீப் யாதவ் கூட சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆகையால், சகால் அணியில் இடம் பெற அவர் தன்னைத் தானே நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 

இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் ஆடும் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சகால்.

click me!