TNPL 2025: திண்டுக்கல் டிராகன்ஸை பந்தாடி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன்! முதல் கோப்பையை தட்டித் தூக்கியது!

Published : Jul 06, 2025, 10:54 PM IST

டிஎன்பிஎல் 2025 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

PREV
15
Tiruppur Tamilans Defeated Dindigul Dragons In The TNPL 2025 Final

த‌மிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL)தொடரின் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இன்று திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் இன்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர்.

25
அமித் சாத்விக் அதிரடி ஆட்டம்

குறிப்பாக அமித் சாத்விக் 34 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் துஷார் ரஹேஜா 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். 

சாய் கிஷோர் (1 ரன்), எஸ் முகமது அலி (23 ரன்கள்), உத்திரசாமி சசிதேவ் (20 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், அனோவங்கர் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் (12 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

35
திருப்பூர் தமிழன்ஸ் அணி 220 ரன்கள் குவிப்பு

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இந்தத் தொடரில் திருப்பூர் அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அதேசமயம், டிஎன்பிஎல் இறுதிப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும்.திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சில், புவனேஷ்வர் 2 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார். 

வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், பெரியசாமி 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், கார்த்திக் சரண் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

45
தொடக்கத்திலேயே தடுமாறிய திண்டுக்கல்

பின்பு இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தொடக்கத்திலேயே சாரை சாரையாக விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னில் சிலம்பரசனின் சூப்பர் பந்தில் போல்டானார். பின்பு வந்த பாபா அபராஜித் 9 ரன்னில் நடராஜன் பந்தில் போல்டானார். இதனைத் தொடர்ந்து விமல் குமார் (10), தினேஷ் (3), ஹன்னி சைனி (17) என திண்டுக்கல் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து களத்துக்கு வருவதுமாக போவதுமாக இருந்தனர்.

55
திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன்

பின்பு அதுல் விட்கர் (24), வெங்கடேஷ் புவனேஷ்வர் (13), வருண் சக்ரவர்த்தி (7) ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அந்த அணி பவுலர் சிவம் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. 

இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டிஎன்பிஎல் 2025 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறையாகும். திருப்பூர் தரப்பில் சிலம்பரசன், இசக்கி முத்து, மோகன் பிரசாத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories