இந்திய அணியின் சீனியர் முதல் அறிமுகம் வரையில் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் 2019 அண்ட் 2023!

First Published | Oct 8, 2023, 11:54 AM IST

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடக்க உள்ள உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

ரோகித் சர்மா:

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 மற்றும் 2019 என்று 2 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இதில், அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்துள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடர்களில் 6 சதங்கள் வரையில் அடித்துள்ளார். இன்று நடக்கும் போட்டியின் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பையில் கேப்டனாக களமிறங்க உள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இன்றைய போட்டியின் மூலமாக 4ஆவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளார். உலகக் கோப்பையில் இதுவரையில் 26 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உள்பட 1030 ரன்கள் எடுத்துள்ளார்.

Tap to resize

கேஎல் ராகுல்:

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் விளையாடியுள்ளார். இதில், 9 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 361 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்று விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 9 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் எடுத்ததோடு, பந்து வீச்சில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்திய அணியின் 15 பேர் கொண்ட கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் காயமடைந்த அக்சர் படேலுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். இவர், கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். இதில், 10 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா:

ரவீந்திர ஜடேஜா 2015 மற்றும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகள் முழுவதும், அவர் மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்று, அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு பந்துவீச்சாளராக தனது திறமையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், பாராட்டத்தக்க 134 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குல்தீப் யாதவ்:

குல்தீப் யாதவ் 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டார். போட்டி முழுவதும், 7 போட்டிகளில் விளையாடி 6 பேட்ஸ்மேன்களை அவுட் செய்து தனது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினார்.

முகமது ஷமி:

முகமது ஷமி இந்த ஆண்டு தனது 3ஆவது ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளார். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். இதில், 11 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை குவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஜஸ்ப்ரித் பும்ரா:

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம் பெற்று 9 போட்டிகளில், பும்ரா வெற்றிகரமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அறிமுக வீரர்கள்:

சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷான், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர். ஆனால், சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாக்கூருக்கு இன்றைய போட்டியில் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!