இதையடுத்து டீம் இந்தியா முதல் இன்னிங்ஸை விளையாடியது. டெஸ்ட் கிரிக்கெட் போன்று விளையாடாமல் டி20 கிரிக்கெட் போன்று அதிரடியாக விளையாடி ஒரே நாளில் உலக சாதனை படைத்தது. அதாவது, வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து மகத்தான சரித்திர சாதனையை இந்தியா படைத்தது.
அதுமட்டுமின்றி யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் இருவரும் அதிவேகமாக அரைசதம் அடித்தனர். விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இறுதியாக இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இந்தியா 52 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர், வங்கதேசம் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 4ஆவது நாள் முடிவில் வங்கதேசம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து 5ஆவது நாள் போட்டி இன்று தொடங்கியது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் வங்கதேச வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றவே வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.