மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஜெமீமா சாதனை சதம் விளாசினார்.
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய பவுலர்களை அடித்து ஓட விட்ட ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்பீல்ட், 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அபார சதம் விளாசினார்.
24
ஆஸ்திரேலியா 338 ரன்கள்
மற்றொரு வீராங்கனை எல்சி பெர்ரி 77 ரன்கள் எடுத்தார். ஆஷ்லே கார்ட்னர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக ஸ்ரீசாரிணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீராங்கனை ஷெபாலி வர்மா 10 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஹர்மன்ப்ரீத், ஜெமீமா அசத்தல்
ஓரளவு சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 24 ரன்னில் கேட்ச் ஆனார். இந்தியா 59/2 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் நங்கூரம் போல் நின்று ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார்கள். ஜெமீமா பொறுமையாக விளையாட, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள்.
34
ஹர்மன்ப்ரீத் அரை சதம்
இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ளினார்கள். இருவரின் பார்னட்ஷிப்பும் 150 ரன்களை கடந்து சென்றது. இருவரும் அரை சதம் அடித்தனர். நன்றாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 226/3 என்ற நிலையில் இருந்தது. பின்பு வந்த தீப்தி சர்மா (24), ரிச்சா கோஷ் (26) சிறப்பாக விளையாடி அவுட் ஆனார்கள்.
மறுமுனையில் தூண் போல் நின்ற ஜெமீமா அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். அவர் இறுதி வரை களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 341 ரன்கள் எடுத்து சாதனை வெற்றி பெற்றது. அத்துடன் மகளிர் உலகக் கோப்பை பைனலுக்கு சென்று அசத்தியுள்ளது. சாதனை சதம் விளாசிய ஜெமீமா 134 பந்தில் 14 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகி விருதை வென்றார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், தென்னாபிரிக்காவும் வரும் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வெல்லுமா?