
கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் அக்ஷர் படேல் 22 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 23 ரன்களும் கொடுக்கவே ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை ருசித்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது.
இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 31 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிரேவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் எடுத்தனர். ஹார்டி, 16 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஸ் 10 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் கிளீன் போல்டானார்.
இதையடுத்து டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ வேட் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். மேக்ஸ்வெல் வலது, இடது, மேல, கீழ என்று சுத்தி சுத்தி பவுண்டரியும், சிக்ஸூம் விளாசினார்.
கடைசி 12 பந்துகளில் ஆஸியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை அக்ஷர் படேல் வீசினார். அந்த ஓவரில் மட்டும் வேட் 17 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் 4, 2, 2, நோபால், 6, 1, பைஸ் 4 என்று மொத்தமாக 22 ரன்கள் குவிக்கப்பட்டது. இஷான் கிஷான் செய்த ஒரு தவறு 11 ரன்கள் கொடுக்க செய்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 20ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார்.
முதல் பந்தில் வேட் பவுண்டரி, 2ஆது பந்தில் சிங்கிள் தட்டி விட்டு வந்தார். கடைசியாக 4 பந்துகளில் 6, 4, 4, 4 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸும் அடிக்கவே ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்று கைப்பற்றியது. கடைசி வரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 104 ரன்கள் குவித்தார். இது அவரது 4ஆவது டி20 சதம் ஆகும்.
இதன் மூலமாக அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மேக்ஸ்வெல் இடம் பெற்றார். அவர், 47 பந்துகளில் சதம் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மாவின் (4 சதங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் 104 ரன்கள் குவித்ததன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் 554 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு அணிக்கு எதிராக டி20 போட்டியில் 37 சிக்ஸ்கள் விளாசியுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்ஷர் படேல் பார்க்கப்படுகினர்.
அக்ஷர் படேல் வீசிய 19ஆவது ஓவரில் 4, 2, 4, நோபால், 6, 1, பைஸ் 4 என்று மொத்தமாக 22 ரன்கள் கொடுத்துவிட்டார். இதில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வேறு ஸ்டம்பிங் செய்கிறேன் என்ற பெயரில், பந்தை ஸ்டெம்புக்கு முன் வந்து பிடிக்க, விதி மீறல் என்பதால் நோ பால் கிடைத்தது. முதலில் அந்த பந்தை வைடு என்று நடுவர் கொடுத்தார். அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தில் மேத்யூ வேட் சிக்ஸ் அடித்தார்.
சரி ஸ்பின்னில் அடிக்கத்தான் செய்வார்கள் என்ற நிலையில், கடைசி ஓவரில் ஒரு யார்க்கர், ஸ்லோ பால் என்று எதுவும் வீசப்படவில்லை. கடைசி 4 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிட்டது. முதல் பந்திலேயே வேட் பவுண்டரி அடிக்கவும் பிரசித் கிருஷ்ணா பதற்றம் அடைந்துவிட்டார். இதில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், அக்ஷர் படேல் என்று ஒவ்வொருவரும் ஐடியா கொடுக்கிறேன் என்ற பெயரில் அவரிடம் பேச பிரசித் கிருஷ்ணா இன்னமும் குழப்பம் அடைந்துவிட்டார்.
எளிதில் ஜெயிக்க வேண்டிய போட்டியில் பிரசித் கிருஷ்ணாவால் தோல்வி அடைந்தோம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி அந்த ஓவரில் ஒரு யார்க்கர் கூட வீசப்படவில்லை. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் நடராஜன், யார்க்கர் என்பதே கடைசியில் டிரெண்டிங்கில் வந்துவிட்டது.
பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் கொடுத்து அதிக ரன்கள் கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். 2ஆவது போட்டியில் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.