ICC ODI Rank: ஐசிசி ஓடிஐ ரேங்க்கில் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணி எந்த இடம்? மற்ற அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிகளுக்கான புதிய வருடாந்திர தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சில ரேட்டிங் புள்ளிகள் குறைந்தாலும், 118 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இந்தியாவை விட ஐந்து புள்ளிகள் குறைவாக, அதாவது 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து இருக்கிறது.
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. போட்டியை நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்த இரு அணிகளைத் தவிர, தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். இதனால், முதலிடத்தில் இருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு தகுதி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
23
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா
ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்களுக்கான ஐசிசி ஒருநாள் தரவரிசையின் வருடாந்திர அப்டேட்டிற்குப் பிறகு இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தியாவின் புள்ளி ஒன்று குறைந்தாலும், முதலிடத்தைப் பிடிப்பதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தென்னாப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 98 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை ஆறாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஒன்பதாவது இடத்தில் இருப்பதால், வங்கதேச அணி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பில் பின்தங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.
33
புதிய வடிவத்தில் உலகக் கோப்பை 2027
ஐசிசி விதிகளின்படி, 2027 மார்ச் 31-ம் தேதிக்குள், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா அணி தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் இருந்தால், ஒன்பதாவது இடத்தில் இருக்கும் அணி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் வங்கதேச அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
2027 உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. 2019 மற்றும் 2023-ல் இருந்தது போன்ற 'ரவுண்ட் ராபின்' முறைக்கு பதிலாக, இம்முறை 2003-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட 'சூப்பர் சிக்ஸ்' (Super Six) முறை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது. இதில் 14 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். ஐசிசி தரவரிசை கணக்கீட்டு முறையில் (Annual Update), 2025 மே மாதத்திற்குப் பிறகு விளையாடிய போட்டிகளுக்கு 100% முக்கியத்துவமும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளின் முடிவுகளுக்கு 50% முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. இதனால்தான் இந்தியா ஒரு புள்ளி குறைந்தாலும் தனது முதலிடத்தைத் தக்கவைக்க முடிந்தது.