2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் லெவன்..! ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்.. கேப்டன் யார் தெரியுமா..?

First Published Jan 24, 2023, 6:41 PM IST

ஒவ்வொரு ஆண்டிலும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட ஆண்டின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துவருகிறது. அந்தவகையில், 2022ம் ஆண்டின் சிறந்த டி20 மற்றும் ஒருநாள் லெவனை ஏற்கனவே ஐசிசி அறிவித்துவிட்ட நிலையில், 2022ன் சிறந்த டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளது. ஐசிசி தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் லெவனை பார்ப்போம்.
 

1. உஸ்மான் கவாஜா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா கடந்த ஆண்டு அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 496 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகளில் உஸ்மான் கவாஜாவின் பங்களிப்பு அளப்பரியது.
 

2. கிரைக் பிராத்வெயிட் - வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கிரைக் பிராத்வெயிட். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பிராத்வெயிட், கடந்த ஆண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்தார். 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ். 2022 நவம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் 174 ரன்களை குவித்து அசத்தினார்.
 

3. மார்னஸ் லபுஷேன் - ஆஸ்திரேலியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 3ம் வரிசையில் இறங்கி மலை மலையாக ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிவரும் லபுஷேன், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 952 ரன்களை குவித்தார்.
 

4. பாபர் அசாம் - பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். டெஸ்ட்டில் மட்டுமல்லாது அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் அசத்திவரும் பாபர் அசாமை எந்த அணியிலும் புறக்கணிக்க முடியாது.

ரோஹித் - கில் அபார சதம்.. ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம் அடித்து ஃபினிஷிங்..! நியூசிலாந்துக்கு மெகா இலக்கு
 

5. ஜானி பேர்ஸ்டோ - இங்கிலாந்து

ஜானி பேர்ஸ்டோவுக்கு கடந்த சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆண்டுகளாக அமைந்தன. வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரராக இருந்துவந்த பேர்ஸ்டோ, கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அபாரமாக ஆடி தன்னை ஒரு டெஸ்ட் வீரராகவும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.
 

6. பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மேட்ச் வின்னரான இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்டுக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது கேப்டன்சியில் கடந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியை முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை படைத்தது இங்கிலாந்து. இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸைத்தான் 2022ன் சிறந்த டெஸ்ட் லெவனின் கேப்டனாக நியமித்தது ஐசிசி.
 

7. ரிஷப் பண்ட் - இந்தியா 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை ஐசிசி தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 90 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி அசத்தியுள்ளார்  ரிஷப் பண்ட். இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழும் ரிஷப் பண்ட், 2022ன் சிறந்த டெஸ்ட் லெவனில் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்திய வீரர் ஆவார்.
 

8. பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.  டெஸ்ட் தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி. அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய கம்மின்ஸ், சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
 

வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

9. ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா

சமகாலத்தின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ககிசோ ரபாடா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக முந்தைய ஆண்டுகளை போலவே 2022லும் சிறந்த பங்களிப்பை செய்தார்.
 

10. நேதன் லயன் - ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனை ஐசிசி டெஸ்ட் அணியின் ஸ்பின்னராக தேர்வு செய்துள்ளது.
 

11. ஜேம்ஸ் ஆண்டர்சன் - இங்கிலாந்து

சமகால கிரிக்கெட்டின் வயது மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதுவும் ஒரு ஃபாஸ்ட் பவுலராக 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிவரும் ஆண்டர்சன் எந்த ஆண்டும் சிறப்பாக ஆடவில்லை என்றால் தான் ஆச்சரியம். அந்தவகையில், கடந்த ஆண்டும் சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்ததில் ஆண்டர்சனின் பங்களிப்பும் முக்கியமானது.
 

click me!