ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இருபெரும் டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்து அதிருப்தியளித்தது. பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடாமல், இந்திய அணியின் மந்தமான அணுகுமுறைதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலியை நீக்கியது மிகப்பெரிய முடிவு. ஆனால் இதற்கு முன் இந்தமாதிரியான அதிரடி நடவடிக்கைகளை வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் எடுத்துள்ளன. இங்கிலாந்து அணி பவரான, அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்தது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தகுதியான அணியை கட்டமைத்தது. ஆஸ்திரேலியா மற்றும் மற்ற சில அணிகளும் இதுமாதிரியான அதிரடி முடிவுகளை எடுத்தன.
கோலிக்கு பதிலாக 3ம் வரிசையில் இறங்கும் வீரரும், ரோஹித்துக்கு பதிலாக ஓபனிங்கில் ஆடும் வீரரும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தால் தேர்வாளர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? அதற்கு தேர்வாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். 2024ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் டி20 ஃபார்மட்டிலிருந்து ஓரங்கட்டுவது என்று முடிவெடுத்துவிட்டால் அதுவும் நல்லதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.