ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.
முகமது நவாஸ் வீசிய பந்தை ஓங்கியும் அடிக்காமல், கேப்பிலும் அடிக்காமல், சும்மா அலட்சியமாக தூக்கியடித்தார் கோலி. கோலி அடித்த பந்து நேராக இஃப்டிகார் அகமதுவிடம் சென்றது. அவர் கேட்ச் பிடிக்க 9.1 ஓவரில் இந்திய அணி 53 ரன்கள் அடித்திருந்தபோது 35 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஜடேஜா - ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடியதால் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான கட்டத்தில் மோசமான ஷாட்டை ஆடி அவுட்டாகிய கோலியை விமர்சித்துள்ளார் கௌதம் கம்பீர்.
34 பந்தில் 35 ரன்கள் அடித்திருந்தார் கோலி. கேப்டன் அவுட்டான அடுத்த ஓவரில் இப்படியா ஒரு ஷாட்டை ஆடி அவுட்டாவது..? இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தால் அனைத்தும் எளிதாகியிருக்கும். கோலி ஆடியது மோசமான ஷாட். சிக்ஸர் அடிக்க வேண்டுமென்றால் ஓங்கி அடித்திருக்க வேண்டும். சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டாகியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் ஆடியது, தெளிவில்லாமல் ஆடப்பட்ட ரெண்டுங்கெட்டான் ஷாட். அதுதான் அதிருப்தியை ஏற்படுத்தியது என்று கௌதம் கம்பீர் விளாசினார்.