இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திடீரென பதவி விலகியதாக தகவல் பரவியது. கம்பீர் எக்ஸ் தளத்தில் இதை அறிவித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி கிட்டத்தட்ட தோல்வியின் பாதையில் சென்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 124 என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இந்த தொடரையும் கிட்டத்தட்ட பறிகொடுத்து விட்டது.
24
கம்பீர் தலைமையில் படுமோசம்
சொந்த மண்னில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதுவும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா சென்று அங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கம்பீர் பதவி விலக வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
34
கம்பீர் திடீர் பதவி விலகல்?
இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கவுதம் கம்பீர் எக்ஸ் தளத்தில் அறிவித்ததாக ஜெட் வேகத்தில் தகவல் பரவியது. அதாவது கவுதம் கம்பீர் பெயரில் வெளியான அந்த அறிக்கையில், ''இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் விமர்சனங்கள், ட்ரோலிங் என்னை சோர்வாக்கி விட்டது.
அணிக்காக நான் அனைத்தையும் கொடுத்தேன். இப்போது எனது சாதனைகள் அப்படியே இருக்கவும், தலை நிமிர்ந்து நிற்கவும் நான் புறப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு இருந்ததால் கம்பீர் ராஜினாமா செய்து விட்டதாக பலரும் நினைத்தனர்.
ஆனால் எக்ஸ் தளத்தில் கவுதம் கம்பீர் பெயரில் வெளியான அந்த அக்கவுண்ட் போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. அதாவது கம்பீர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அவர் வெளியிட்டதாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஆனால் கம்பீரின் உண்மையான எக்ஸ் கணக்கு வேறு. தனது உண்மையான எக்ஸ் அக்கவுண்ட்டில் கம்பீர் கடைசியாக கடந்த 21ம் தேதி தான் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
உண்மையான அக்கவுண்டில் எந்த பதிவும் இல்லை
அதன்பிறகு இப்போது வரை அவர் எந்த பதிவும் வெளியிடவில்லை. இதன்மூலம் கம்பீரின் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் இந்திய அணியின் நலன் கருதி இந்த பதிவு உண்மையாக இருக்கக் கூடாதா? என கம்பீரை விமர்சிப்பவர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.