
டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இருக்கும் மவுசை விட கிரிக்கெட்டிற்கு மவுசு ஜாஸ்தி. பணக்கார விளையாட்டு என்று கிரிக்கெட்டை சொல்லலாம். கிரிக்கெட் இந்தியாவில் அதிக ரசிகர்களால் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு. கிரிக்கெட் விளையாட்டில் பெரும்பாலானோர் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் மீதே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
உணர்ச்சிகளை தூண்டும் விளையாட்டு. இது மோதல்கள் மற்றும் சர்ச்சைகளை உள்ளடக்கியது. போட்டிகளில் விளையாட தடை முதல் கிரிமினல் வழக்குகள் வரை, கேப்டன் – பயிற்சியாளர்கள் சண்டை வரை எல்லாவற்றையுமே இந்திய கிரிக்கெட் பார்த்துள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டாப் 10 சர்ச்சைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க….
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டாப் 10 சர்ச்சைகளில் முதலிடம் பிடிப்பது மைக் டென்னஸ் ஏற்படுத்திய சர்ச்சை. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், மேட்ச் ரெப்ஃரியுமான மைக், 2001 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டினார். அதோடு, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அப்போது தடையும் விதித்தார்.
சச்சின், சேவா, தீப் தாஸ்குப்தா, ஹர்பஜன் சிங், சிவசுந்தர் தாஸ் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அப்போது கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியும் தண்டிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் டென்னஸிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
எம்.எஸ்.தோனி மீது கிரிமினல் வழக்கு:
மத உணர்வுகளை சீர்குலைத்ததாக எம்.எஸ்.தோனி மீது 2015 ஆம் ஆண்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது, விஷ்ணு போன்ற உருவ தோற்றத்தோடு கையில் ஷூ உள்ளிட்ட பல பொருட்களை வைத்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தோனிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய தோனிக்கு நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்தது. அதோடு, 2016 ஆம் ஆண்டு வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டு காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாலியல் மற்றும் இனவெறி கருத்துக்களை பாண்டியா தெரிவித்தார். இதன் காரணமாக அவர் ஒரு சில போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டார்.
சவுரவ் கங்குலி – கிரேக் சேப்பல்
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சண்டையில் சவுரவ் கங்குலி மற்றும் கிரேக் சேப்பல் இருவரும் சிக்கினர். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது கங்குலியின் உடல் தகுதி காரணமாக அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று கிரேக் சேப்பல் பரிந்துரைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேப்பலை பயிற்சியாளராக் பரிந்துரை செய்தது தனது தவறு என்று கங்குலி கூறினார். எனினும், கங்குலி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தியா – ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான நடுவரின் தீர்ப்பு, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இனரீதியிலான குற்றச்சாட்டு என்று பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கு எதிராக சென்றது.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற பிக்சிங். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா போன்ற வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரரான ஸ்ரீசாந்தை அறைந்தார். இச்சம்பவத்திற்கு பிறகு ஹர்பஜனுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் தற்போது வரையில் நண்பர்களாக பழகி வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களில் தவறான கருத்துக்களால் அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.