
கிரிக்கெட், வீரர்களை களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெருமைக்குரியவர்களாக மாற்றுகிறது. இந்தியாவில் அதிகம் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு எது என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட் விளையாட்டில் பெரும்பாலானோர் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் இல்லை. என்றாலும், இந்தியாவில் உள்ளவர்கள் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார்கள்.
அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக வருமானத்தையும், அதிக லாபம் தரும் ஒரு விளையாட்டாகவும் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகள் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. கிரிக்கெட் டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாயை உருவாக்குகின்றன.
இதன் விளைவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் இடம் பெற்று விளையாடுவதன் மூலமாக போதுமான வருமானம் பெற்று பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்களாக மாறுகின்றனர். உலகளவில் 2ஆவது பணக்கார கிரிக்கெட் லீக் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் உள்ளது.
இந்த தொடரில் இடம் பெற்று விளையாடும் வீரர்கள் தங்களது திறமையின் மூலமாக அதிக வருமானம் பெறுகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் முதல் கவுதம் கம்பீர் வரை இந்தியாவின் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க..
சச்சின் டெண்டுல்கர் - 150 மில்லியன் டாலர்:
மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அனைத்து பார்மேட் கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே ஒரு ஜாம்பவான் இவர் மட்டுமே. இவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் 150 மில்லியன் டாலர் ஆகும். இதன் மூலமாக இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் சச்சின் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
எம்.எஸ்.தோனி -110 மில்லியன் டாலர்
எம்.எஸ்.தோனி என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கொண்டாடப்பட்டார். இந்தியாவிற்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்த பெருமை இவரையே சாரும். தோனி தனது சிறந்த விக்கெட் கீப்பிங்கிற்காக ரசிகர்களால் மதிக்கப்படுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு 110 மில்லியன் டாலர். பணக்கார கிரிக்கெட் வீரர்களில் 2ஆவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி - 93 மில்லியன் டாலர்
விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு 93 மில்லியன் டாலர். இதன் மூலமாக இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், அதிகமாக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
சவுரவ் கங்குலி - 50 மில்லியன் டாலர்:
கொல்கத்தா தாதா என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியவர் என்ற பெருமைக்குரியவர். இவரது நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.
வீரேந்திர சேவாக் - 45 மில்லியன் டாலர்
அதிரடிக்கு பெயர் போனவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு 45 மில்லியன் டாலர் ஆகும். இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறார்.
யுவராஜ் சிங் – 35 மில்லியன் டாலர்
2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா டிராபி வெல்ல யுவராஜ் சிங்கும் ஒரு காரணமாக இருந்துள்ளார். ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இவரது சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் பட்டாளங்களை வைத்திருக்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு 35 மில்லியன் டாலர் ஆகும்.
சுரேஷ் ரெய்னா – 25 மில்லியன் டாலர்
2011 கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். எம்.எஸ். தோனியின் பெஸ்ட் பிரண்டாகவும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர் ஆகும்.
ராகுல் டிராவிட் - 23 மில்லியன் டாலர்
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். தோனியைப் போன்று பொறுமைக்கும் பெயர் பெற்றவர். மட்டை மன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர் ஆகும். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்ததோடு பணியிலிருந்து நிறைவு பெற்றார்.
ரோகித் சர்மா – 22 மில்லியன் டாலர்
எம்.எஸ்.தோனிக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. இந்த உலகக் கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தவர். இவரது நிகர சொத்து மதிப்பு 22 மில்லியன் டாலர் ஆகும்.
கவுதம் காம்பீர் – 19 மில்லியன் டாலர்
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் காம்பீர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது இவரது நிகர சொத்து மதிப்பு 19 மில்லியன் டாலர் ஆகும்.