இந்திய அணியை பார்த்து கத்துக்கங்க.. நீங்களும்தான் இருக்கீங்களே! பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளாசிய டேனிஷ் கனேரியா

First Published Aug 12, 2022, 8:04 PM IST

இந்திய அணியை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் அணியை விமர்சித்துள்ளார் டேனிஷ் கனேரியா.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அடுத்ததாக அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை நடக்கிறது. அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் நடக்கவிருப்பதால், அதற்காக ரோஹித் சர்மா தலைமையில் தீவிரமாக தயாராகிவரும் இந்திய அணி, இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
 

ஆசிய கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.  கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
 

அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. கடந்த ஆண்டு தோல்வி அடைந்த இந்திய அணி வேறு; இந்த முறை களமிறங்கும் இந்திய அணி வேறு. பயிற்சியாளர், கேப்டன், வீரர்கள், அணிச்சூழல் என அனைத்துமே இம்முறை முற்றிலும் வேறு.
 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் இந்திய அணி பென்ச் வலிமையை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சீனியர் வீரர்களே அவர்களது இடங்களை தக்கவைக்க போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளனர் இளம் வீரர்கள்.

இதையும் படிங்க - இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்

அந்தளவிற்கு இந்திய அணி எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பளித்துவருகிறது. சிறிய அணிகளுக்கு எதிரான அல்லது முக்கியத்துவமற்ற தொடர்களில் சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, இளம் வீரர்களுக்கு மேட்ச் பிராக்டிஸ் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மேலும் சிறிய அணிகளுக்கு எதிராக பி, சி அணிகளை இறக்கிவிடும் அளவிற்கு இந்திய அணியின் பென்ச் வலிமை உள்ளது.

அந்தவகையில், இந்திய அணியின் எதிர்காலத்தை நோக்கிய செயல்பாட்டை விதந்தோதிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, அம்மாதிரியான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படாத பாகிஸ்தான் கிரிக்கெட்டை விமர்சித்துள்ளார்.
 

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஆடியபிறகு, பாகிஸ்தான் அணி வெறும் 7 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி அதில் 6 வெற்றி பெற்றிருக்கிறது. பெரிய அணியான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. 

இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!

ஆனால் இந்திய அணியோ 24 போட்டிகளில் ஆடி 19 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்திய அணியின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்திய அணி பெரும்பாலும் பி மற்றும் சி அணிகளை வைத்துத்தான் ஆடுகிறது. ரோஹித் சர்மா கூறியதை போல, இந்திய அணி பென்ச் வலிமையை பலப்படுத்தியுள்ளது. 
 

இந்திய அணி எதிர்காலத்தை கருத்தில்கொண்டு செயல்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி எதிர்காலத்தை கருத்தில் கொள்வதில்லை. பாகிஸ்தான் அணி மனநிலையை மாற்ற வேண்டும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும். நெதர்லாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!