தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி கேப்டன் டெம்பா பவுமாவை பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ‘பாடி ஷேமிங்’ செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி தரப்பில் எய்டன் மார்க்ரம் அதிகப்பட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.
24
டெம்பா பவுமாவை 'பாடி ஷேமிங்' செய்தனரா?
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 14 ஓவரில் 5 மெய்டன்களுடன் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்வால் 12 ரன்னில் அவுட் ஆனார். இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவை 'பாடி ஷேமிங்' செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
34
'பவுனா' என்ற சொல்லை குறிப்பிட்டு பேச்சு
அதாவது பும்ரா வீசிய பந்து பவுமாவின் பேடை தாக்கியது. இந்திய வீரர்கள் எல்.பி.ட.பிள்யூ கேட்டு அப்பீல் செய்த நிலையில், கள நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் டிஆர்எஸ் கேட்பதா? வேண்டாமா? என இந்திய வீரர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர்.
அப்போது ரிஷப் பண்ட் அல்லது பும்ரா இருவரில் யாரோ ஒருவர் பவுமாவை 'பவுனா' என்று குறிப்பிட்டு பந்து மேலே செல்லும் ஸ்டெம்பை தாக்காது என பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. பின்பு டிஆர்எஸ் எடுக்கவில்லை. ரீப்ளேயை பார்த்தபோது அவர்கள் கூறியபடி பந்து ஸ்டெம்புக்கு மேலே சென்றது தெரியவந்தது.
வெடித்த சர்ச்சை
இதில் 'பவுனா' என்ற சொல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது 'பவுனா' என்றால் குட்டையானவர் அல்லது குள்ளன் என்று பொருள். ஆகவே பவுமா குட்டையானவர் என்பதை குறிப்பிட்டு பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என கூறியுள்ளனர். எதிரணி கேப்டனை 'குள்ளன்' எனக்கூறி பும்ராவும், ரிஷப் பண்ட்டும் 'பாடி ஷேமிங்' செய்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் பவுமா குட்டையாக இருப்பதால் பந்து மேலே செல்லும் என இயல்பாக கூறியுள்ளனர். இது எப்படி 'பாடி ஷேமிங்' ஆகும் என்று ஒரு சிலர் ஆதரவாக கருத்துகளை கூறி வருகின்றனர். பவுமாவை குள்ளன் என கூறியது தொடர்பாக நாங்கள் எந்த விவாதமும் நடத்தப்போவதில்லை என தென்னாப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வருகிறது.