Ben Stokes: இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பாவன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரென்ட் பிரிட்ஜில் நடக்கும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 29 அன்று முடிவடைகிறது. இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமையும்.
24
உருக்கமாக பேசிய பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டிதான் இங்கிலாந்து வீரராக தனது கடைசிப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக அணிக்கு தனது முழு உழைப்பையும் கொடுத்திருப்பதாகவும், இப்போது "கடைசி ஒரு பயணத்திற்கு" தயாராகிவிட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார். சக வீரர்களிடம், தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அணியின் இந்த முயற்சி குறித்து பெருமையுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகவும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.
34
உலகக்கோப்பைகளில் மேட்ச் வின்னர்
அவர் தொடர்ந்து பேசுகையில், "அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும். இதுதான் உங்கள் கேப்டனாக எனது கடைசி இரண்டு நாட்கள், இங்கிலாந்துக்காக விளையாடும் எனது கடைசி இரண்டு நாட்கள்'' என்றார். 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றின் இறுதிப்போட்டிகளில் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 2019 ஆஷஸ் தொடரின் ஹெடிங்லி டெஸ்டில் அவர் விளையாடிய 135* ரன்கள் இன்னிங்ஸ் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸாகக் கருதப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் 121 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்களுடன் 7,228 ரன்கள் மற்றும் 246 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஓடிஐ கிரிக்கெட்டில் 114 போட்டிகளில் 5 சதங்களுடன் 3,463 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 43 போட்டிகளில் 585 ரன்கள் மற்றும் 26 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் (136) அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாவது இரட்டைச் சதம் (258 ரன்கள்) அடித்த வீரர் ஆவார். ஐசிசியின் (ICC) 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளை வென்றுள்ளார்.