7 மாசத்துல 7 கேப்டன்கள்.. என்னதான் நடக்குது இந்திய அணியில்..? மௌனம் கலைத்த கங்குலி

First Published Jul 9, 2022, 6:39 PM IST

இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிய பின்னர், 7 பேர் கேப்டன்சி செய்திருப்பது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
 

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதன்பின்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுக்குமான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
 

ஆனால் காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 7 மாதங்களில் 7 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தியிருக்கின்றனர். இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா கேப்டன்சி செய்தார். தென்னாப்பிரிக்காவில் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்தார்.

இந்தியாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன்சி செய்தார். 

அயர்லாந்தில் நடந்த டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்தார். இங்கிலாந்தில் நடந்த பயிற்சி டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி செய்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் கடைசி நேரத்தில் ரோஹித்துக்கு கொரோனா என்பதால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்தார். 
 

இப்படியாக 7 மாதங்களில் 7 கேப்டன்கள் மாறிய நிலையில், இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, சிறிய காலக்கட்டத்தில் அதிகமான பேர் கேப்டனாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், சூழ்நிலை காரணமாக இது நடந்தது. ரோஹித் காயத்தால் தென்னாப்பிரிக்காவில் ராகுல் கேப்டன்சி செய்தார். 

இங்கிலாந்தில் ரோஹித் பயிற்சி போட்டியில் ஆடும்போது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. இதுமாதிரியான சூழல் உருவாகும்போது யாரையும் குறைசொல்ல முடியாது.  வீரர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக அவர்களுக்கு போதுமான பிரேக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தலைமை பயிற்சியாளர்  ராகுல் டிராவிட்டின் நிலையை நினைத்துத்தான் வருந்தவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என்பது பயிற்சியாளருக்கு சவாலான விஷயம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!