இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று பிக்பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
இந்திய அணி, உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் என ஒட்டுமொத்தமாக பிசிசிஐயுடனான அனைத்துவிதமான ஒப்பந்தங்களிலிருந்தும் வெளியேறிய பின்னர் வேண்டுமானால் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு ஐபிஎல்லில் ஆடிக்கொண்டிருந்தால் கூட வெளிநாட்டு லீக்குகளில் ஆடமுடியாது. அதுதான் பிசிசிஐயின் விதிமுறை.
தென்னாப்பிரிக்க டி20 லீக் மற்றும் யுஏஇ டி20 லீக் ஆகிய தொடர்கள் புதிதாக தொடங்கப்படும் நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் அந்த டி20 லீக்குகளில் பங்குபெறும் அணிகளையும் வாங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர்களில் ஆடும் ஜோஹன்னஸ்பர்க் அணியை சிஎஸ்கேவும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை சன்ரைசர்ஸும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடள்ஸும் வாங்கியுள்ளன.
ஆனால் ஐபிஎல்லில் ஆடும் வீரர்களை அந்த லீக்குகளில் பயன்படுத்த முடியாது. இந்திய அணி, உள்நாட்டு அணி, ஐபிஎல் என அனைத்துவிதத்திலும் பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்ட பின்னர் தான் எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் ஆடவோ அல்லது அங்கம் வகிக்கவோ முடியும். இல்லையென்றால் கண்டிப்பாக அது முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.