ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது. பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை இந்த தொடர் நடக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். 75.56 சதவிகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-0 அல்லது 2-1 அல்லது 3-0 அல்லது 3-1 என வென்றால் தான் ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர்.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் 4 ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய மூவரும் டாட் மர்ஃபி என்ற 22 வயது இளம் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆஸி., அணியின் வெள்ளைப்பந்து அணிகளுக்கான ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவைவிட டாட் மர்ஃபி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா
கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் கை விரல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார்கள். 2வது போட்டியிலிருந்து ஆடுவார்கள். வார்னர், கவாஜா, ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஸ்காட் போலந்த், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகிய வழக்கமான வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டான் அகர், ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், லான்ஸ் மோரிஸ், டாட் மார்ஃபி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.