மறக்க முடியுமா ஹிட் மேனின் 264 ரன்கள்: 9 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் சர்மா ஆடிய ருத்ர தாண்டவம்!

First Published Jan 12, 2023, 12:03 PM IST

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 264 ரன்கள் அடித்ததை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

ரோகித் சர்மா 264 ரன்கள்

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், ஒன்றில் கூட இலங்கை அணி வெற்றி பெறவில்லை என்பது வருத்தப்படக் கூடிய ஒன்று.

4ஆவது ஒரு நாள் போட்டி

இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவின் ஈடான் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் அஜின்க்யா ரகானே மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா

அஜின்க்யா ரகானே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 8 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 64 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா 11, ராபின் உத்தப்பா 16 ரன்கள் நாட் அவுட் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ரோகித் சர்மா 264 ரன்கள்

ஒருபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா நின்னு, நிதானமாக ஆடி அரைசதம், சதம் அடித்தார். அதன் பிறகு ருத்ர தாண்டவ ஆட்டத்தை காட்டினார். இலங்கை பவுலர்களை துவம்சம் செய்தார். அவர் 173 பந்துகளில் 9 சிக்சர்கள், 33 பவுண்டரிகள் உள்பட 264 ரன்கள் சேர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். 

இந்தியா 404

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் மேத்யூஸ் மட்டும் 75 ரன்கள் எடுத்தார். திரிமன்னே 59 ரன்கள் எடுக்க இலங்கை அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று வரை ரோகித் சர்மாவின் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

இந்தியா - இலங்கை: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்

இந்த நிலையில், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

டாஸ் முக்கியம்:

இதில், முதலில் டாஸ் ஜெயிக்கும் அணி பேட்டிங் தேர்வு செய்தால் மட்டுமே அந்த அணியால் அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற முடியும். ஏனென்றால் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். ஆகையால், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தால் அதிக ரன்கள் குவிக்க முடியும். 2ஆவது பேட்டிங்கிற்கு மைதானம் சாதமாக இருக்குமா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பனி விழ ஆரம்பித்துவிடும்.

click me!