இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா, செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை விருதை தட்டித் தூக்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, செப்டம்பர் 2025-க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24
ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா
சக வீரர் குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வேயின் பிரையன் பென்னட் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி அபிஷேக் சர்மா இந்த விருதை தட்டித் தூக்கியுள்ளார். அபிஷேக் சர்மா ஆசிய கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 44.85 சராசரி மற்றும் 200.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் எடுத்து, ரன் குவிப்பில் முதலிடம் பிடித்தார். இதில் மூன்று அரை சதங்களும், அதிகபட்சமாக 75 ரன்களும் அடங்கும்.
34
விருது வென்றதில் மகிழ்ச்சி
ஐசிசி விருது வென்றது குறித்து பேசிய அபிஷேக் சர்மா, ''ஐசிசி விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அணிக்கு வெற்றி தேடித் தந்த சில முக்கியமான போட்டிகளுக்காக இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெற்றியைப் பெறும் ஒரு அணியில் நான் அங்கம் வகிப்பதில் பெருமைப்படுகிறேன்.
அணி நிர்வாகத்துக்கு நன்றி
டி20 போட்டிகளில் எங்களின் சமீபத்திய சாதனைகள், எங்களின் சிறப்பான அணி கலாச்சாரத்தையும் நேர்மறையான மனநிலையையும் பிரதிபலிக்கின்றன. அணி நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கும், எனது சக வீரர்களின் ஆதரவிற்கும் நன்றி. இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த குழுவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
ஐசிசி ஆண்கள் டி20 பேட்டர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, 931 புள்ளிகளுடன் தனது கெரியர்-உயர் மதிப்பீட்டை எட்டினார். 2020-ல் இங்கிலாந்தின் டேவிட் மலான் பெற்ற 919 புள்ளிகள் என்ற முந்தைய சாதனையை அவர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செப்டம்பர் 2025-க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணி அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
50 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்
பாகிஸ்தானின் சித்ரா அமீன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி ஐசிசி விருதை தட்டித் தூக்கியுள்ளார். இந்த மாதம் முழுவதும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மந்தனா, 77 என்ற நம்பமுடியாத சராசரியுடன், 135.68 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 308 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அவர் 50 பந்துகளில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.